மதுரை : ”மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக தி.மு.க.,வினர் பொய் செய்தி பரப்புகின்றனர்,” என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
மதுரையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன் கலந்து கொண்டனர்.
அதில், பீயூஷ் கோயல் பேசியதாவது: திமுகவின் முன்னுரிமை ஊழலுக்கு தான். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி என திமுக வாரிசுகளின் எண்ணிக்கையைப் போல, அவர்களின் ஊழலும் அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் கூட 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டிபிஆர் அறிக்கையை திருத்தி தருமாறு கேட்டதற்கு, அதை திருத்தம் செய்து அனுப்பாமல், மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டதாக திமுகவினர் பொய் செய்தி பரப்புகின்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணியிலும் நிலத்தை முழுமையாக கையகப்படுத்தி தரவில்லை. நிலம் இல்லாமல், காற்றில் ரன்வேயை உருவாக்க முடியுமா? மத்திய அரசு, ரன் வேயை நீட்டிக்க தயாராக இருந்தும், இன்னமும் ‘ப்ராசஸ்’ என்ற முறையில் தான் தமிழகம் உள்ளது.
தமிழின் தொன்மைக்கும், கலாசாரத்திற்கும் மதிப்பளிக்காமல் இழிவுபடுத்திய உதயநிதி, எப்போதுமே முதல்வராக வரக்கூடாது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை ஏற்படுத்திய மோசமான சூழலை மறந்து விடக்கூடாது. நிலம், மணல் மாபியாக்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். தி.மு.க., அரசு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. பிரதமர் மோடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் தலைமையில் நல்ல ஆட்சி தமிழகத்தில் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
