திமுக கூட்டணி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அதே போல் புவனகிரி தொகுதியில் துரை.கி. சரவணன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு வடலூர் பேருந்து நிலையம் அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், “குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்று 6வது முறையாக போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை ஆறாவது முறையாக வெற்றி அடைய செய்து சிக்ஸர் அடிக்க வேண்டும். இந்த தொகுதியில் மண்ணின் மைந்தரும் வேங்கையின் பயங்கரமான அவர், மக்களோடு மக்களாக பழகி இந்த தொகுதியில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், வள்ளலார் சர்வதேச மையம், சார்பதிவாளர் அலுவலகம், துணை சுகாதார நிலையம், கடலூர் முதல் சேலம் வரை நான்கு வழி சாலையாக மாற்றியது உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை செய்து தொகுதியை வளர்ச்சி அடைய செய்துள்ளார். இந்த தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழக அணிக்கும் நடைபெறும் தேர்தலாகும். டெல்லி அணியை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். அதனை செய்வீர்களா” என தொண்டர்களை பார்த்து கேட்டார்.
அப்போது, செய்வோம் என ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து பேசிய அவர், “என் அரசியல் ஆசான் திருமாவின் ஆசி பெற்ற வேட்பாளர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை குறிஞ்சிப்பாடி தொகுதியிலும் அதேபோல் புவனகிரி தொகுதியில் துரை.கி சரவணனை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்ய வேண்டும். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இதில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் திராவிட மாடல் அரசு அமைந்தடன் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-திலிருந்து 2 ஆயிரமாக வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை ரூ.1200லிருந்து ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். மாணவர்களுக்கு 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும். அது மட்டும் இல்லாமல் முக்கிய திட்டமான இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரத்திற்கு கூப்பன் வழங்கி மின்சாதன பொருட்கள் வாங்குவதற்கு வாக்குறுதிகளை அளித்துள்ளோம். மீண்டும் கழக ஆட்சி அமைய உரிமையோடும் பாசத்தோடும் தலைவரின் மகனாகவும், முத்துவேல் கருணாநிதியின் பேரனாகவும் உங்களிடம் கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
ஒன்றிய அரசு தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்துவதற்கு முயற்சித்தது. அதனை அறிந்த நம் தலைவர் இரவோடு இரவாக ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு ரூ.5 ஆயிரத்தை வங்கி கணக்கில் வரவு வைத்தார். ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதிகளை தமிழ்நாட்டுக்கு தருவது இல்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை இல்லை” எனப் பேசினார். அப்போது போட்டோவை காட்டுங்கள் என பொதுமக்கள் நீங்க கேட்டதால் படத்தைக் காட்டுகிறேன் எனக் கூறி சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்து கிடப்பது போல் உள்ள படத்தை காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “இதுதான் அந்த படம் என காட்டி கீழே படுத்துட்டு இருப்பது யார் தெரியுமா? இவர் தான் எடப்பாடி பழனிச்சாமி, இப்படி தான் முதல்வர் ஆனார். இது உலகப் புகழ்பெற்ற படமாக மாறிவிட்டது. இன்னும் 12 நாட்களே உள்ளது. அதிமுக அணியை பின்னோக்கி தள்ள திமுக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் கூறி பசுந்தோள் பழனிச்சாமியை படுதோல்வி பழனிச்சாமியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதனை தலைவரின் மகனாகவும் முத்துவேல் கருணாநிதி பேரனாகவும் உரிமையோடும் பாசத்தோடு கேட்கிறேன் செய்வீர்களா” என்றார். செய்வோம் என பலத்த கோஷம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெய்வேலியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சபா. ராஜேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
