தமிழகத்திற்கு மத்திய அரசு தந்தது ரூ.14 லட்சம் கோடி: நிதி விபரங்களை வெளியிட்டது பா.ஜ.,

சென்னை : ‘தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது; தமிழகத்தை விட, வட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் முக்கியத்துவம் அளிக்கிறது’ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ., தரப்பு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் இருந்து இதுவரை தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:

* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்திற்கான வரி பகிர்வாக 4.01 லட்சம் கோடி ரூபாயும்; மானியங்களாக 3 லட்சம் கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அதைவிட 4.60 மடங்கு அதிக நிதி பகிர்வாக, 7.02 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி பகிர்வு, மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி ஆகியவற்றை சேர்த்தால், 14 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 2004 – 14ல் வரி பகிர்வில், 94,871 கோடி ரூபாயை ஒதுக்கிய நிலையில், பா.ஜ., அரசு, அதை 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய மானியம், 57,925 கோடி ரூபாயாக இருந்தது.

* பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 14,804 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12.66 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன

* ‘உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், 414 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 40.98 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

* ‘முத்ரா’ திட்டத்தின் கீழ், 3.20 லட்சம் கோடி மதிப்புள்ள சிறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன; இதில், 68 சதவீத பயனாளிகள் பெண்கள்

* பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் மொத்தம், 12,764 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

* பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டிற்காக, 7,722 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

* பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ், 4 லட்சம் வியாபாரிகளுக்கு, 928 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

* பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவு திட்டத்தின் கீழ், 3.64 லட்சம் குடும்பங்களுக்கு, 5,621 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன

* பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், 1.80 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன

* ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 1.10 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

* தமிழகத்தில், 1,535 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன

* பயிர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, 98 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். பல்வேறு பருவ காலங்களில் காப்பீட்டு

பிரீமியமாக, 78,663 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது

* பிரதமரின் மீன்வளத் திட்டத்தில், 1.80 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள், மீன வளர்ப்பாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் பயனடைந்துள்ளனர்

* ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். மருத்துவ செலவுகளுக்காக, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் நிதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு இதுவரை, 73,184 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* பிரதமரின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ், இதுவரை, 8,133 கோடி ரூபாய் செலவில், 15,816 கி.மீ., சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன

* பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், 4.18 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு, 1,028 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது

* பிரதமரின், ‘மாத்ரு வந்தனா யோஜனா’ எனும் மகப்பேறு திட்டத்தின் கீழ் இதுவரை, 7.80 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 254 கோடி ரூபாயில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

* துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், 61 லட்சம் வீடுகளுக்கு கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன

* வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக, 335 கோடி ரூபாய் நிதியுதவியுடன், 48,652 சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

* ஏழாயிரம் கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன

* காங்கிரஸ் ஆட்சியில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு, 879 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், பா.ஜ., ஆட்சியில், 8.50 மடங்கு அதிகமாக, 7,611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* காங்கிரஸ் ஆட்சியில், 14,985 கி.மீ., தொலைவிலான ரயில் தண்டவாளங்கள் மட்டுமே இருந்த நிலையில், பா.ஜ., ஆட்சியில், 34,428 கி.மீ., துாரத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன

* தமிழகத்தில், 77 ரயில் நிலையங்கள், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு, தலா ஒன்பது ‘வந்தே பாரத்’ ரயில்களும், அம்ரித் பாரத் ரயில்களும் வழங்கப்பட்டுள்ளன

* சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக, 8,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், 1,100 கோடி ரூபாயில் புதிய முனையம்; துாத்துக்குடியில், 452 கோடி ரூபாயில் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளன

* துறைமுக மேம்பாட்டிற்காக, ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், 93,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 98 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

பா.ஜ.,வினருக்கு மோடி பாராட்டு’தி.மு.க.,வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்திய, தமிழக பா.ஜ., செயல் வீரர்களை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன்’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள பாஜ தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, அவர்களுடன், பிரதமர் மோடி, ‘நமோ’ செயலி வாயிலாக, நாளை மாலை 4:00 மணிக்கு, ‘எனது ஓட்டுச்சாவடி வலிமையான ஓட்டுச்சாவடி’ என்ற கலந்துரையால் நிகழ்ச்சி வாயிலாக உரையாட உள்ளார். இதற்காக, பாஜ தொண்டர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் என பலரும், நமோ செயலியில் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் பிரதமர் மோடி , ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொலைநோக்கு பார்வையை விரிவாக எடுத்துரைத்த, நம் தமிழக பாஜ செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாளை மாலை நடக்கும், ‘எனது ஓட்டுச்சாவடி, வலிமையான ஓட்டுச்சாவடி’ கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நம் செயல்வீரர்களுடன் நான் உரையாட இருக்கிறேன்.இவ்வாறு அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Source link