குஜராத் அணியிடம் வீழ்ந்தது லக்னோ: பிரசித் கிருஷ்ணா, சுப்மன் கில் அபாரம்

லக்னோ: ‘வேகப்புயல்’ பிரசித் கிருஷ்ணா (4 விக்.,) கைகொடுக்க, குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது. லக்னோ அணி ஏமாற்றம் அளித்தது.

லக்னோ, வாஜ்பாய் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் லக்னோ, குஜராத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

தேறாத ரிஷாப்: லக்னோ அணி துவக்கத்தில் தடுமாறியது. ரபாடா பந்தில் மிட்சல் மார்ஷ் (11) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரிஷாப் பன்ட் (18), சிராஜ் பந்தை துாக்கி அடித்தார். டிவாட்யா கலக்கலாக பிடிக்க, பரிதாபமாக வெளியேறினார். பின் பிரசித் கிருஷ்ணா மிரட்டினார். இவரது ‘வேகத்தில்’ மார்க்ரம் (30) அவுட்டாக, 7 ஓவரில் 69/3 ரன் எடுத்து தவித்தது. கிருஷ்ணா பந்தில் படோனி (9) நடையை கட்டினார். ‘ஆபத்தான’ நிகோலஸ் பூரனும் (19) கிருஷ்ணாவிடம் ‘சரண்டர்’ ஆனார். அப்துல் சமது, 18 ரன் எடுத்தார். முகுல் சவுத்ரியை (18) அவுட்டாக்கிய கிருஷ்ணா, தனது 4வது விக்கெட்டை பெற்றார். கடைசி கட்டத்தில் ‘டெயிலெண்டர்கள்’ கைகொடுத்தனர். ஜார்ஜ் லிண்டே, 16 ரன் விளாசினார். லக்னோ அணி 20 ஓவரில் 164/8 ரன் எடுத்தது. முகமது ஷமி (12), அவேஷ் கான் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

‘சூப்பர்’ சுப்மன்: சுலப இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் அசத்தினார். ஷமி ஓவரில் 20 ரன் (2,4,6,4,4) விளாசினார். சாய் சுதர்சன் (15) நிலைக்கவில்லை. 34 பந்தில் அரைசதம் எட்டினார் சுப்மன். மறுபக்கம் வெளுத்து வாங்கிய ஜோஸ் பட்லர், அவேஷ் கான் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். லிண்டே பந்தில் ஒரு ரன் எடுத்த இவர், ‘டி-20’ அரங்கில் 100வது அரைசதம் எட்டினார். சுப்மன் 56 ரன்னுக்கு (40 பந்து, 6×4, 1×6) அவுட்டானார். சிறிது நேரத்தில் பட்லர் 60 ரன்னுக்கு (37 பந்து, 11×4) ஷமி ‘வேகத்தில்’ வெளியேறினார். பிரின்ஸ் யாதவ் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, வெற்றி எளிதானது. குஜராத் அணி 18.4 ஓவரில் 165/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வாஷிங்டன் (20), டிவாட்யா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை பிரசித் கிருஷ்ணா (4-0-28-4) வென்றார்.

பட்லர் 100 அரைசதம்

60 ரன் விளாசிய ஜோஸ் பட்லர், ஒட்டுமொத்த ‘டி-20’ அரங்கில் 100வது அரைசதத்தை பதிவு செய்தார். இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரரானார். முதல் இரு இடங்களில் வார்னர் (116), கோலி (106) உள்ளனர். பட்லர் 8 சதமும் அடித்துள்ளார்.

* ‘டி-20’ அரங்கில் 14,000 ரன்னை (468 இன்னிங்ஸ்) எட்டிய 5வது வீரரானார் பட்லர்.

4000 ரன்

சுப்மன் கில் தனது 25வது ரன்னை எட்டியது போது கிரிக்கெட் லீக் தொடரில் 4000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார். இதுவரை 121 போட்டியில், 4 சதம், 28 அரைசதம் உட்பட 4031 ரன் குவித்துள்ளார்.

* 4000 ரன்னை குறைந்த இன்னிங்சில் அடைந்த இந்திய வீரர்கள் வரிசையில் கோலியை (128 இன்னிங்ஸ்) முந்தி 2வது இடம் பிடித்தார் சுப்மன் (118 இன்னிங்ஸ்). முதலிடத்தில் ராகுல் (105 இன்னிங்ஸ்) உள்ளார்.

* இளம் வயதில் 4000 ரன்னை அடைந்த வீரர்கள் வரிசையில் கோலியை (27 ஆண்டு, 195 நாள்) முந்தி முதலிடம் பிடித்தார் சுப்மன் (26 ஆண்டு, 216 நாள்). மூன்றாவது இடத்தில் சஞ்சு சாம்சன் (29 ஆண்டு, 147 நாள்) உள்ளார்.

Source link