ராய்ப்பூர்: ”சத்தீஸ்கரில், சரணடைந்த நக்சல்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும்,” என, அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.
மத்திய – மாநில அரசுகளின் அதிரடி நடவடிக்கைகளால், சத்தீஸ்கரில் நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். சமீபத்தில், நக்சல்கள் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் நேற்று கூறியுள்ளதாவது:
சத்தீஸ்கரில் குறித்த காலத்திற்குள் நக்சல் ஒழிக்கப்பட்டதற்கான பெருமை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே சேரும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது வளர்ச்சி பணிகள் வேகமடைந்துள்ளன. சுகாதாரம், கல்வி, விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போர்க்களம் என முத்திரை குத்தப்பட்ட பஸ்தார் பகுதியை சுற்றுலா, உயர் தொழில்நுட்பக் கட்டமைப்பு பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பழங்குடியின பகுதிகளை, பொது நீரோட்டத்தில் இணைப்பதற்காக, ‘நியத் நெல்லனார்’ எனப்படும், ‘உங்கள் நல்ல கிராமம்’ என்ற விரிவான கொள்கையை மாநில அரசு எடுத்துள்ளது. இதன் மூலம், தொலைபேசி கோபுரங்களை அமைப்பதிலும், சாலைகளை உருவாக்குவதிலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
சரணடைந்த 3,000 நக்சல்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. சரணடைந்த ஒவ்வொருவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா, 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அதுமட்டுமின்றி, ஒருமுறை நிதியாக, 50,000 ரூபாய் வழங்கப்படும்.
கிராமப்புற வாழ்விற்கு திரும்ப விரும்புவோருக்கு ஒரு ஹெக்டேர் விவசாய நிலமும், நகர்ப்புற வாழ்வை தேர்வு செய்வோருக்கு ஒரு குடியிருப்பு மனையும் வழங்கப்படும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தொழில் பயிற்சியும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
