பாட்னா: ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், பீஹார் முதல்வர் பதவியில் இருந்து இன்றோ அல்லது நாளையோ விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பீஹாரில் புதிய அரசு பதவியேற்பதற்கான பணிகள் நாளை துவங்கும் என ஐக்கிய ஜனதா தள எம்.பி., சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார். பீஹாரில் கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வென்றாலும், நிதிஷ் குமாரே முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், கடந்த மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்; எம்.பி.,யாகவும் அவர் சமீபத்தில் பதவியேற்றார்.
இதையடுத்து, பீஹார் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்வது உறுதியானது. அதற்கான கடிதத்தை இன்றோ அல்லது நாளையோ மாநில கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைனிடம் முறைப்படி வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 20 ஆண்டுகளுக்கு மேலான அவரின் மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது.
தனி நடைமுறை
இதற்கிடையே, புதிய அரசு அமைக்கும் பணிகள் நாளை முதல் துவங்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார். பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியுள்ளதாவது:
பீஹாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் இடையே நடந்து வருகிறது. இது தொடர்பான பணிகள் அதிகாரப்பூர்வமாக நாளை துவங்கும். பா.ஜ., பரிந்துரையின் படி, கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் புதிய முதல்வரை தேர்வு செய்வர். இங்கு, புதிய அரசு அமைப்பதில் பா.ஜ.,வுக்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்த விவகாரத்தில், அக்கட்சியினருக்கு என தனி நடைமுறை உள்ளது. அவர்களின் பங்களிப்பை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உற்சாகம்
இதற்கிடையே, தற்போதைய துணை முதல்வராக உள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான விஜய் குமார் சவுத்ரி உள்ளிட்டோர் நேற்று நிதிஷ் குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சூழலில், நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நடக்கவுள்ள பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஹார் சட்டசபைக்கான பா.ஜ., தலைவரை தேர்வு செய்யும், கட்சியின் பார்வையாளராக, மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை பா.ஜ., தலைமை நியமித்துள்ளது.
துணை முதல்வராக உள்ள சாம்ராட் சவுத்ரி, மத்திய உள்துறை இணையமைச்சராக உள்ள நித்யானந்த ராய், மாநில அமைச்சர்களான லக்கேந்திர பஸ்வான், ஸ்ரேயாசி சிங் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளன.
புதிய முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவது உறுதியானதை அடுத்து அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்வர் பெயரை பா.ஜ., தலைமை அறிவித்த பின் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பங்கேற்பது உறுதியானால், புதிய அரசின் பதவியேற்பு விழா வரும் 18ம் தேதி நடக்கும் என்றும் பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
