சென்னை: கிரிக்கெட் லீக் தொடரில் முதல் வெற்றி பெற்றது சென்னை அணி. நேற்று 23 ரன்னில் டில்லியை வென்றது. சாம்சன், 115 ரன் விளாசினார்.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி கேப்டன் அக்சர் படேல், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் காயத்தில் இருந்து மீண்ட பிரவிஸ் சேர்க்கப்பட்டார். தோனி மீண்டும் களமிறங்கவில்லை.
சாம்சன் நம்பிக்கை
சென்னை அணிக்கு ருதுராஜ், ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 5.1 ஓவரில் 50/0 ரன்களை எட்டியது. ஒருபக்கம் சாம்சன் வேகமாக ரன் சேர்த்தாலும், ருதுராஜ் மந்தமாக விளையாடினார். அக்சர் படேல் வீசிய போட்டியின் 7வது ஓவரின் 2வது பந்தில் ருதுராஜ் (18 பந்து, 15 ரன்) அவுட்டானார்.
ஆயுஷ் அபாரம்
அடுத்து சாம்சன், ஆயுஷ் மாத்ரே இணைந்தனர். குல்தீப் ஓவரில் (12 வது) ஆயுஷ், சாம்சன் என இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். நிகிடி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்த ஆயுஷ், அக்சர் பந்தையும் (சிக்சர்) விட்டுவைக்கவில்லை.
நடராஜன் 15வது ஓவரை வீசினார். இதன் முதல் பந்தில் சிக்சர் அடித்த ஆயுஷ், அரைசதம் (27 பந்து) கடந்தார். 3, 4 வது பந்தில் சிக்சர், பவுண்டரி என சாம்சன் விளாச, 19 ரன் எடுக்கப்பட்டன.
பின் திடீரென ஸ்கோர் வேகம் குறைந்தது. 16, 17 வது ஓவர்களில் 8, 5 என 13 ரன் மட்டும் கிடைத்தன. ஆயுஷ் 36 பந்தில் 59 ரன் எடுத்த நிலையில் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.
நடராஜன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சாம்சன், 52 பந்தில் சதம் எட்டினார். துபே, வந்த வேகத்தில், நிகிடி பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். முகேஷ் வீசிய கடைசி ஓவரில் துபே, ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். சென்னை அணி 20 ஓவரில் 212/2 ரன் எடுத்தது. சாம்சன் (115 ரன், 56 பந்து), துபே (20 ரன், 10 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்டப்ஸ் ஆறுதல்
டில்லி அணிக்கு ராகுல் (18), நிசங்கா ஜோடி துவக்கம் தந்தது. நிசங்கா 41 ரன் எடுத்தார். சமீர் ரிஸ்வி (6), அக்சர் படேல் (1) நிலைக்கவில்லை. மில்லர் 17 ரன்னில் திரும்பினார். அஷூதோஷ் சர்மா (19) நுார் அகமது பந்தில் அவுட்டானார். தனி நபராக போராடிய ஸ்டப்ஸ், 30 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 60 ரன்னில் அவுட்டாக, சென்னை வெற்றி உறுதியானது.
டில்லி அணி 20 ஓவரில் 189 ரன்னில் ஆல் அவுட்டாகி தோற்றது. சென்னை சார்பில் ஓவர்டன் 4, கம்போஜ் 3 விக்கெட் சாய்த்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியான ஆறு தோல்விக்குப் பின், முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி.
முதன் முறை
கிரிக்கெட் லீக் அரங்கில் சென்னை அணிக்காக நேற்று சாம்சன் (115) முதல் சதம் அடித்தது ஸ்பெஷலாக அமைந்தது. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக 3 சதம் (102, 102, 119) அடித்த சாம்சன், மொத்தம் 4 சதம் விளாசியுள்ளார்.
* டில்லி அணிக்கு எதிராக சதம் அடித்த 2வது சென்னை வீரர் ஆனார் சாம்சன். முன்னதாக 2012ல் முரளி விஜய், 113 ரன் எடுத்தார்.
இரண்டாவது இடம்
கிரிக்கெட் லீக் அரங்கில் 19 வயதுக்கு முன் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் ஆயுஷ் மாத்ரே (3) இரண்டாவது இடம் பெற்றார். 4 அரைசதம் அடித்த வைபவ் முதலிடத்தில் உள்ளார். பிரித்வி ஷா (2) 3வது இடம் பிடித்தார்.
