சென்னையைச் சேர்ந்த ‘அவதார் கரியர் கிரியேட்டர்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்டுவதற்காக பி.எஸ்.இ., -எஸ்.எம்.இ., தளத்தில் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக 2 ரூபாய் முகமதிப்பு கொண்ட 18.50 லட்சம் புதிய பங்குகள் மட்டுமே வெளியிடப்பட உள்ளன. இதில் நிறுவனர்கள் தங்களது பங்குகளை விற்கும் ‘ஆபர் பார் சேல்’ முறை இடம்பெறவில்லை என நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரட்டப்படும் நிதியை, பெண்களுக்கான வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள், ஆறு புதிய நகரங்களில் வணிக விரிவாக்கம், பிராண்டு விளம்பரம் மற்றும் பொதுவான நிறுவன தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
அவதார் கரியர் கிரியேட்டர்ஸ், பணியிடங்களில் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படும் லாப நோக்கிலான சமூக நிறுவனமாகும். இந்நிறுவனம் பன்முகத்தன்மை கொண்ட பணியமர்த்தல், இடைவெளிக்கு பின் பெண்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
