இஸ்லாமாபாத்: அமெரிக்கா – ஈரான் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் நேற்று முன்தினம், 21 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தை, எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்., 28ம் தேதி போரை துவக்கின. பல நாடுகளின் வலியுறுத்தல்களுக்கு பின், இரண்டு வார போர் நிறுத்தத்துக்கு அமெரிக்காவும், ஈரானும் ஒப்புக் கொண்டன.
ஈரான் மறுப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இரு தரப்பும், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பேசுவதற்கு முன்வந்தன. அதன்படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று முன்தினம் பேச்சு துவங்கியது.
அமெரிக்கா தரப்பில் அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேச்சுக்கு தலைமை தாங்கினார். ஈரான் தரப்பில் அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழு பங்கேற்றது. நேற்று காலை வரை 21 மணி நேரம் நீடித்த பேச்சு, எந்தவொரு உடன் பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
அமெரிக்க தரப்பில், ‘எதிர்காலத்தில் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஈரான் வழங்க வேண்டும். அணு ஆயுதத்தை விரைவாக உருவாக்க உதவும் கருவிகள் அல்லது தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தக் கூடாது’ என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது; இதை ஏற்க ஈரான் மறுத்தது.
புறப்பட்டனர்
அதேபோல, அணுசக்திக்காக யுரேனியத்தை செறிவூட்டுவது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஈரான் கேட்டது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சு தோல்வியில் முடிந்தது. இரு தரப்பும், பாகிஸ்தானில் இருந்து நேற்றே புறப்பட்டன.
அமைதி பேச்சு குறித்து ஈரான் வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அமெரிக்கா அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைத்ததால், உடன்பாட்டை எட்ட முடியவில்லை. ஒரே சந்திப்பில் உடன்பாடு எட்டப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.
இதையடுத்து, அடுத்த சுற்று பேச்சுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. அதற்கு இரு நாடுகளும் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.
