ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 379 வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர். பூத் சிலிப்பில் வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டிய வாக்குச்சாவடி விவரம், அமைவிட பகுதி என அனைத்து விவரங்களும் இருக்கும். க்யூ ஆர் கோடு வசதியும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 197 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 11 ஆயிரத்து 778 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 182 பேரும் இருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ‘பூத் சிலிப்’ ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜெராக்ஸ் இயந்திரத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது அதைத் தொடர்ந்து இன்று முதல் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது ‘பூத் சிலிப்’ எடுத்துச் சென்று வாக்களிக்கலாம்.
