ஐபிஎல் 2026 சீசனில், 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது.
சி.எஸ்.கே. அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் (கவுகாத்தி), 2-வது போட்டியில் பஞ்சாப்பிடம் 5 வித்தியாசத்திலும் (சேப்பாக்கம்), 3-வது ஆட்டத்தில் ஆர்.சி.பி.யிடம் 43 ரன் வித்தியாசத்திலும் (பெங்களூரு) தோற்றது.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து டெல்லி கேப்பிட்டல்சை 23 ரன்னில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை நாளை (14-ந்தேதி) சந்திக்கிறது. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.
கொல்கத்தா அணியை வீழ்த்தி 2- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் சி.எஸ்.கே. இருக்கிறது. டெல்லிக்கு எதிராக சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார். அவர் நல்ல நிலைக்கு திரும்பியது பேட்டிங்கில் கூடுதல் பலத்தை வெளிப்படுத்தியது. இதே போல ஆயுஷ் மாத்ரேவும் நிலையாக பேட்டிங் செய்து வருகிறார்.
மேலும் பிரேவிஸ், சர்பராஸ் கான், ஷிவம் துபே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து மோசமாக நிலையில் உள்ளார். அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவது அவசியமாகும். ஆல்-ரவுண்டர் பணியில் ஓவர்டன் நல்ல நிலையில் உள்ளார். இதே போல அன்சுல் கம்மோஜூம் நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். சுழற்பந்து வீரர் நூர் அகமதுவின் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 3-வது ஐ.பி.எல். ஆட்டமாகும். கடந்த 3-ந்தேதி நடைபெற்ற போட்டியில் 209 ரன் குவித்து தோற்றது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 212 ரன் குவித்து வெற்றி பெற்றது. சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டிக்காக ரசிகர்கள் உற்சாக கோலாகலத்துக்கு தயாராக உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே.வின் வெற்றியால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நாளையும் அதிரடியான ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சேப்பாக்கத்தில் தொடர்ச்சியான 6 தோல்விக்கு கடந்த ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்தது.
ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 ஆட்டத்தில் 1 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை (6 விக்கெட்), ஐதராபாத் (65 ரன்), லக்னோ (3 விக்கெட்) அணிகளிடம் தோற்றது. பஞ்சாப்புடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் வேட்கையில் கொல்கத்தா இருக்கிறது. அந்த அணியில் ரகுவன்ஷி, பின் ஆலன், கேமரூன் கிரீன், ரிங்கு சிங், சுனில் நரைன் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இரு அணிகளும் மோதிய 32 போட்டியில் சி.எஸ்.கே. 20-ல், கொல்கத்தா 11-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
