பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காலப்போக்கில் பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால், பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
இதற்கிடையில், வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அன்புமணி அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க ராமதாஸ், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார்.
சேலம் பள்ளப்பட்டியில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் அருளை ஆதரித்து ராமதாஸ் நேற்று (12-04-26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்த சிறிது நேரத்திலேயே ராமதாஸுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த நிர்வாகிகள், அவரை குண்டுகட்டாக தூக்கி சேலம் காந்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இன்று காலை சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய உடல்நலம் குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக ராமதாஸை தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். ராமதாஸ் பூரண குணமாக வேண்டும் என்றும், அவர் குணமாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதாகவும் முதல்வர் தெரிவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
