கல் வைத்த தங்க நகைகளை 'இப்படி' வாங்குவது புத்திசாலித்தனம்! அதில் ஆரம், நெக்லெஸ் வேண்டாம்; 'இது' ஓகே

கல் நகைகளைப் பார்த்தாலே, ‘வாங்க வேண்டும்’ என்கிற ஆசை தானாக தோன்றும். ஆனால், ஆசைக்காக வாங்கும் கல் நகைகள் விற்கும்போதும், அடமானம் வைக்கும் போதும் லாபம் இல்லை.

மேலும், கல் நகைகளை வாங்கும் போது சில சிக்கல்களும் உண்டு. அந்தச் சிக்கல்கள் குறித்தும், அதை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்தும் ஈரோட்டில் உள்ள ஜெம் & ஜுவல்லரி டெக்னாலஜி ட்ரெய்னிங் சென்டரின் இயக்குநர் K.சுவாமிநாதன் விளக்குகிறார்.

ஜெம் & ஜீவல்லரி டெக்னாலஜி ட்ரெய்னிங் சென்டரின் இயக்குநர் K.சுவாமிநாதன்

“கல் நகைகளைப் பொறுத்தவரை ஆசைக்குத்தான் வாங்கலாமே தவிர, அதில் எந்த லாபமும் இல்லை.

ஒரு கல் நகை வாங்கும்போது, அதில் எத்தனை எடைக்கு கல் உள்ளது… எத்தனை எடைக்கு தங்கம் உள்ளன என்பது கடைக்காரர்கள் சொல்வதுதான். இது உண்மையா… பொய்யா என்பதை நம்மால் பிரித்தோ… சோதித்தோ பார்க்க முடியாது.

மேலும், கல் நகைகளை எக்ஸ்சேஞ்ச் அல்லது விற்கும்போது, வைரக் கற்களுக்கு மட்டும் தான் 70 சதவிகித பணம் கிடைக்கும்.

நவ ரத்தினக் கற்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ரேட் உண்டு என்று கூறுவார்கள். ஆனால், அது பெரும்பாலும் கிடைக்காது. ‘டேமேஜ்’ போன்ற காரணங்கள் கூறப்படும்.

அப்படியே நவ ரத்தினக் கற்களுக்கு காசு கொடுத்தாலும், அது 30 சதவிகிதம் அளவில்தான் இருக்கும்.

இன்னொரு பக்கம், கல் நகைகளை அடமானம் வைக்கும்போது, வைரமே ஆனாலும், அதன் மதிப்பு சேர்க்கப்படாது. அதனால், மீதம் இருக்கும் தங்கத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு தான் கடனாக வழங்கப்படும்.

கல் தங்க நகை
கல் தங்க நகை

அப்போது கல் நகைகளே வாங்கக் கூடாதா என்று கேட்டால், வாங்கலாம். அது எப்போது என்றால்…

உங்களிடம் அனைத்து தேவையான நகைகளும் உள்ளது. இதைத் தாண்டி தான் கல் நகை வாங்குகிறீர்கள் என்றால் வாங்கலாம். அதுவும் ஆசையிருந்தால் மட்டும் வாங்குவது நல்லது.

கல் வைத்த ஆரம், நெக்லேஸ், வளையல் ஆகியவற்றை எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிவிடாதீர்கள். கல் வைத்த கம்மல், மோதிரம் வாங்கலாம்.

இது ஏன் என்றால், கல் வைத்த ஆரம், நெக்லஸ், வளையல் வாங்கும்போது, நமக்கு நஷ்டம் மிக அதிகம். கம்மல், மோதிரத்திலும் லாபம் இல்லைதான். ஆனால், பெரியளவில் நஷ்டம் இருக்காது.

கல் நகைகளில் இன்னொரு முக்கிய ஹேக்…

நகைக் கடைகளில் விற்கும் ரெடிமேட் கல் நகைகளை வாங்காதீர்கள். கடைகளில் ஆர்டர் கொடுத்து இந்த நகைகளைச் செய்யுங்கள்.

அப்படி செய்யும்போது, முன்னரே, எத்தனை எடைக்குத் தங்கம் பயன்படுத்தலாம்… பயன்படுத்தப்படுகிறது என்பது நமக்கு முன்னரே தெரிந்துவிடும்.

அதனால், கல்லுக்கு அதிக தொகை கொடுக்கும் நிலை நமக்கு இருக்காது.

அப்படி ஆர்டர் கொடுத்து கல் நகைகளை வாங்கும் போது, கடைக்காரரிடம் கல் எடை தனியாக, தங்கத்தின் எடை தனியாக வேண்டும் என்று தகவலைக் கேட்டுப் பெறுங்கள். இதன் மூலம், நகையை விற்கும் போதும், அடமானம் வைக்கும்போதும் கல் மற்றும் தங்கத்தின் தரவுகளைக் கொடுக்க எளிதாக இருக்கும்”.

Source link