கோவை: கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிமுக ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், நடைபெற உள்ள தேர்தலில் கிணத்துக்கடவு திமுக வசமாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக் கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் மதுக்கரை நகராட்சி, கிணத்துக்கடவு, வெள்ளலூர், எட்டிமடை, திருமலையாம்பாளையம், ஒத்தக்கால் மண்டபம், செட்டிபாளையம் ஆகிய 6 பேரூராட்சிகளும், சொக்கனூர், பொட்டையாண்டிபுரம், வடபுதூர், சோலவம்பாளையம், குதிரைபாளையம், முத்தூர் ஆகிய 7 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
கோவை மாநகராட்சியின் வார்டுகள் 94 முதல் 100 வரை, குறிச்சி மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் அடங்கும்.
கல்குவாரி, விவசாயம் மற்றும் கயிறு சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருக்கின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் உள்ளன. தக்காளி மற்றும் தென்னை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
