சென்னை: ‘புலி’ படத்தின் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித் துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்த உத்தரவையும், இதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்யக் கோரி தவெக தலைவர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த 2015-16ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டின் வருமானம் ரூ.35.43 கோடி என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், விஜய் வீட்டில் வருமான வரித் துறை கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையின் அடிப்படையில், ‘புலி’ படத்துக்காக பெற்ற ரூ.15 கோடியை வருமானத்தில் காட்டவில்லை என்று கூறி அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த 2022 ஜூன் 30-ம் தேதி உத்தரவிட்டது.
