பாக்., அணி 2வது வெற்றி * அமெரிக்க மீண்டும் ஏமாற்றம்

கொழும்பு: அமெரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்புவில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற அமெரிக்க அணி பீல்டிங் தேர்வு செய்தது.

பர்ஹான் அரைசதம்

பாகிஸ்தான் அணிக்கு சைம் அயுப், ஷாகிப்ஜடா பர்ஹான் ஜோடி துவக்கம் தந்தது. 5.1 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது அயுப் (19) அவுட்டானார். கேப்டன் சல்மான் அகா (1) வந்த வேகத்தில் வெளியேறினார். அடுத்து இணைந்த பர்ஹான், பாபர் ஆசம் ஜோடி வேகமாக ரன் சேர்த்தது.

பர்ஹான், 27 பந்தில் அரைசதம் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த நிலையில் பாபர் ஆசம், 46 ரன்னில் அவுட்டாகினார். அடுத்த சில நிமிடத்தில் 41 பந்தில் 73 ரன் எடுத்த பர்ஹான், ஹர்மீத் சிங் பந்தில் அவுட்டானார். ‘மிடில் ஆர்டரில்’ 12 பந்தில் 30 ரன் எடுத்து கைகொடுத்தார் ஷதாப் கான். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர்.

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 190/9 ரன் குவித்தது. அமெரிக்கா சார்பில் ஷாத்லே, அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.

கடின இலக்கைத் துரத்திய அமெரிக்க அணிக்கு ஷயன் ஜஹாங்கிர் (49), ஆன்ரியஸ் கவுஸ் (13) ஜோடி துவக்கம் தந்தது. மிலிந்த் 29 ரன் எடுத்தார். சுபம் (51) அரைசதம் அடித்து போராடிய போதும் வெற்றிக்கு போதவில்லை. அமெரிக்க அணி 20 ஓவரில் 158/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. முதல் போட்டியில் நெதர்லாந்து, அடுத்து அமெரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்.

Source link