ஐ.சி.சி., சலுகை என்ன * ரகசியம் காக்கும் பாக்.,

கராச்சி: ‘டி-20’ உலக கோப்பை தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர வங்கதேசம் மறுத்தது. இதனால், வங்கதேச அணி நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம்,’ என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இதையடுத்து, லாகூர் சென்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட, பாகிஸ்தான் அரசு, தனது புறக்கணிப்பு முடிவை வாபஸ் பெற்றது. வரும் பிப்., 15ல் இலங்கையின் கொழும்புவில் இந்தியா, பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி நடக்க உள்ளது.

வங்கத்திற்கு சலுகை

இந்தியா, பாகிஸ்தான் மோதல் நடக்க உதவியதால், உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய, வங்கதேசத்தின் மீது, எவ்வித தடையும் விதிக்கப் போவதில்லை,’ என ஐ.சி.சி., தெரிவித்தது. தவிர 2028-31ல் உலக கோப்பை தொடர் (19 வயது) நடத்த அனுமதி தரப்படும் என உறுதி தரப்பட்டுள்ளது.

அதேநேரம் பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி., தரப்பில் வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன் விபரங்கள், ‘டி-20’ உலக கோப்பை முடிந்தபின் தெரிவிக்கப்படும் என, பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link