அசாம் முதல்வர் சர்மா சர்ச்சை வீடியோ: ஆளும் பா.ஜ., மீது போலீசில் காங்., புகார்

குவஹாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போல வீடியோ வெளியான விவகாரத்தில், அம்மாநில பா.ஜ., மீது காங்., போலீசில் புகார் அளித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

கடும் நடவடிக்கை

இங்கு மொத்தமுள்ள, 126 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் பா.ஜ., – எதிர்க்கட்சியான காங்., இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து முதல்வரான ஹிமந்த பிஸ்வ சர்மா, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும், அசாமில் காங்கிரசின் முகமாக அறியப்படும் அக்கட்சி எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகோய்க்கு, பாக்., உடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறார்.

கடந்த 7ல், முஸ்லிம்களை நோக்கி முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோவை, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், அசாம் பா.ஜ., வெளியிட்டது. இதற்கு காங்., உட்பட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இனப் படுகொலையை முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா துாண்டுவதாக, கவுரவ் கோகோய் குற்றஞ்சாட்டினார். பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சர்ச்சைக்குரிய வீடியோவை அசாம் பா.ஜ., நீக்கியது.

வலியுறுத்தல்

இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ‘வீடியோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வழக்கு தொடர்ந்தால் என்னை கைது செய்யுங்கள்; சிறைக்கு செல்லவும் தயார். வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு நான் எப்போதும் எதிரானவன். அதில் என்றும் உறுதியாக இருப்பேன்’ என்றார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில், அசாம் பா.ஜ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்., – எம்.எல்.ஏ.,க்கள் சிபாமணி போரா, திகந்தா பர்மன் ஆகியோர், குவஹாத்தியில் உள்ள டிஸ்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

‘அரசியல் களமாக மாறும் நீதிமன்றம்’

உச்ச நீதிமன்றத்தில், இ.கம்யூ., தலைவர் அன்னி ராஜா தாக்கல் செய்த மனு: ஜன., 27ல் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ‘வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறிய 4 – 5 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்படுவர். பா.ஜ., அவர்களுக்கு எதிரானது’ என்றார். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்தையும், நாட்டின் ஒழுங்கையும் சீர்குலைக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, ”முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா முஸ்லிம்களை குறிவைத்து துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது,” என்றார். இதை பரிசீலிப்பதாக தெரிவித்த அமர்வு, ‘தேர்தல் காலங்களில் அரசியல் களத்தில் நடக்க வேண்டிய போர்கள் பெரும்பாலும் உச்ச நீதிமன்றத்திலேயே நடத்தப்படுகின்றன’ என்றும் குறிப்பிட்டது.

ரூ.500 கோடி கேட்டு அவதுாறு வழக்கு

குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் காங்., தலைவரும், எம்.பி., யுமான கவுரவ் கோகோய், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் குடும்பத்தினர் மாநிலம் முழுதும், 3,960 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதை திட்டவட்டமாக மறுத்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, தன் மீது அவதுாறு பரப்பியதாகக் கூறி, காங்., தலைவர்கள் ஜித்தேந்திர சிங், பூபேஷ் பாகேல், கவுரவ் கோகோய் ஆகியோருக்கு எதிராக, 500 கோடி ரூபாய் கேட்டு அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Source link