வாஷி ங்டன்: இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் முடிவானதையடுத்து, அமெரிக்க டிஜிட்டல் சேவைகள் மீதான வரிகளை தளர்த்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க டிஜிட்டல் சேவைகள் மீதான தனது வரியை தளர்த்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இது தவிர, டிஜிட்டல் வர்த்தகத்துக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் பாரபட்சமான நடைமுறைகளுக்கு முடிவு கட்டும் விதமாக, புதிய இரு தரப்பு டிஜிட்டல் வர்த்தக கொள்கையை உருவாக்குவது குறித்து பேச்சு நடத்தவும் இந்தியா உறுதியளித்து உள்ளது. மின்னணு பரிமாற்றங்களுக்கு சுங்க வரி விதிப்பதை தடை செய்யும் விதிகளும் அந்த கொள்கையில் அடங்கும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து அளிக்கப்படும் இ-காமர்ஸ் சேவை வாயிலாக கிடைக்கும் வருவாய்க்கு 2 சதவீதமும், டிஜிட்டல் விளம்பர வருவாய்க்கு 6 சதவீதமும் இந்தியா வரி விதித்துவந்தது. இந்த வரிகள் 2025 ஏப்ரலுக்கு முன்னதாக விலக்கிகொள்ளப்பட்டன.
சமீபத்தில் உருவாகியுள்ள இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்த வரி விலக்கலுக்கு சட்டரீதியிலான உறுதிப்பாடு கிடைத்துள்ளது. அதையே, வெள்ளை மாளிகை இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
