பனப்பாக்கம்: அமைச்சர் காந்தி மீது முதல்வர் ஸ்டாலின் கோபத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், சிப்காட் விழாவில் அமைச்சரை, முதல்வர் புறக்கணித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் ஜே.எல்.ஆர்., நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையின் முதல் அலகை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
பனப்பாக்கம் வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, ராணிப்பேட்டை தி.மு.க., மாவட்டச் செயலரும், அமைச்சருமான காந்தி பிரமாண்ட ஏற்பாடு செய்திருந்தார். சிப்காட் தொழிற்பேட்டை பிரதான வாயிலில், பாரம்பரிய நடனம், செண்டை மேளம், பறை இசை, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
வாயிலின் இருபுறமும், ஏராளமான தொண்டர்களுடன் அமைச்சர் காந்தி காத்திருந்தார். ஆனால், சிப்காட் பிரதான வாயிலை புறக்கணித்து விட்டு, நெடும்புலி வழியாக மாற்றுப்பாதையில், நிகழ்ச்சி இடத்துக்கு முதல்வர் சென்று விட்டார்
தகவல் அறிந்த காந்தி, அவசர அவசரமாக நிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார். அங்கும், அமைச்சர் காந்தியிடம் முதல்வர் ஸ்டாலின் முகம் கொடுத்து பேசவில்லை.
ரத்தன் டாடா சிலை அருகே, குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்த போதும், உள்ளூர் அமைச்சர் காந்தி அழைக்கப்படவில்லை. அமைச்சர்கள் நேரு, ராஜா, ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் மட்டும் இருந்தனர்.
இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ‘அமைச்சர் காந்தியின் கட்சி செயல்பாடுகள், முதல்வரை வருத்தப்பட செய்துள்ளன. சென்னையில், ஒரு அரசு நிகழ்ச்சியில், காந்தியை முதல்வர் ஸ்டாலின் கடிந்து கொண்டார். அதன்பின்பே, அவரை தொடர்ச்சியாக புறக்கணிக்கிறார்’ என்றனர்.
