புதுடில்லி: ஜனவரி மாத வாகன விற்பனை அறிக்கையை, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘படா’ வெளியிட்டுள்ளது.
இதில், கடந்த மாத வாகன விற்பனை, 17.61 சதவீதம் உயர்ந்து, வலுவான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஜனவரியில், 23.14 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜனவரியில், 27.22 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் தெரிவித்ததாவது:
இந்த ஜனவரியில் மொத்த வாகன விற்பனை, இரட்டை இலக்கத்தில் சிறப்பான நிலையில் உள்ளது. கிராமப்புற தேவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு, திருமண காலம் மற்றும் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள், ஜி.எஸ்.டி., குறைப்பு ஆகியவை வாகன விற்பனையை அதிகரித்தன.
கட்டுமான இயந்திரங்கள் விற்பனையை தவிர, இதர வாகனங்கள் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளன. இருசக்கர வாகனங்களின் விற்பனை, 20.82 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கிராமப்புற தேவை, இருசக்கர வாகனங்களுக்கு முதுகெலும்பாக இருந்தது. வாடிக்கையாளர்கள் அதிக மதிப்புள்ள, நடுத்தர பவர் கொண்ட வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
சரக்கு போக்குவரத்து, வாகன தேவை அதிகரிப்பு, கட்டுமான செலவுகள் ஆகியவை வர்த்தக வாகன விற்பனைக்கு ஆதரவாக இருந்தன. இலகு மற்றும் நடுத்தர ரக வர்த்தக வாகன தேவை அதிகரிப்பு, நகர்ப்புற, கிராமப்புற சந்தைகளின் வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்.
கடந்த மாதம் அதிகபட்சமாக, டிராக்டர் விற்பனை, 22.89 சதவீதம் வளர்ச்சி கண்டு, வலுவான நிலையில் இருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
