சென்னை: கோழி இறைச்சியை, ‘ஆப் பாயில்டு’ ஆக, அரைவேக்காடு நிலையில் சமைத்து சாப்பிட வேண்டாம் என்றும், அதன் வாயிலாக பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
-சென்னை அடையாறு, இந்திரா நகர் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில், ஜன., 5ம் தேதி முதல் காகங்கள், அடுத்தடுத்து இறந்து விழுந்தன. தொடர்ச்சியாக காகங்கள் இறந்ததால், அதன் உடல் பாகங்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் பரிசோதிக்கப்பட்டன.
அதில் தெளிவான முடிவுகள் எட்டப்படாததால், இறந்த காகங்களின் உடற்கூறுகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், ‘ஹெச்5 என்1 ஏவியன் இன்ப்ளுயன்ஸா’ எனும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, பீஹார் மாநிலத்திலும் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், நாடு முழுதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி, பறவைகளின் உமிழ்நீர், மலம், உணவு போன்றவற்றின் வாயிலாக, மனிதர்களுக்கு அந்த நோய் எளிதல் பரவக்கூடும். வறட்டு இருமல், சளி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் ரத்தம் வருதல், எலும்புகள், மூட்டுகள், தசைகளில் வலி, துாக்கமின்மை, நுரையீரல் அழற்சி மற்றும் உள்ளுறுப்புகள் செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் சுப்பிர மணியன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
பறவை காய்ச்சல் தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதம் கிடைத்தவுடன், தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
பறவைகள் இறந்தால், உடனடியாக ஆழமான குழியில் புதைக்க வேண்டும். கோழி போன்றவை திடீரென இறந்து போனால், அதை சமைத்து சாப்பிட வேண்டாம். ‘ஆப் பாயில்டு’ நிலையில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கோழி இறைச்சி உண்பவர்கள், நன்றாக சமைத்த பின்னரே உண்ண வேண்டும். பாதி வேக வைத்த இறைச்சியை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு கூறினார்.
பின், அவர் அளித்த மற்றொரு பேட்டியில், “ஆப்பாயில் குறித்து, நான் அளித்த விளக்கம் தவறாக புரியப்பட்டுள்ளது. ‘ஆப்பாயில் முட்டை சாப்பிடக் கூடாது’ என நான் கூறியதாக செய்தி வெளிவந்துள்ளது. ‘ஆப் பாயில்டு’ ஆக, அதாவது அரைவேக்காடாக சமைத்து, கோழிக்கறி உணவை சாப்பிடக் கூடாது. நன்றாக வேக வைத்த பின்னர் தான் சாப்பிட வேண்டும் என்று தான் கூறினேன். ஆப்பாயில் முட்டை சாப்பிட வேண்டாம் என நான் கூறவில்லை,” என்றார்.
அச்சம் வேண்டாம்
பறவை காய்ச்சலை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட பறவை, கோழியை தொடுவதன் வாயிலாக மனிதர்களுக்கு எளிதில் பரவுகிறது. இந்த தொற்று நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்; உயிரிழப்பு வரை ஏற்படக்கூடும். அதே நேரம் ஒருவர் வாயிலாக மற்றொருவருக்கு இதுவரை பரவவில்லை என்பதால் அச்சம் வேண்டாம். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பாதுகாப்புடன் இருக்கலாம். – பரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்
முட்டை ஆப்பா
யிலும் ஆபத்துதான்
‘பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி தொடர்பான அனைத்து உணவுகளும், மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சி மற்றும் முட்டையை, 74 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு கீழே சமைத்தால், அதில் உள்ள கிருமிகள் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புள்ளது. அப்போது, அதை சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே முட்டை ஆப்பாயிலும் ஆபத்து தான். எச்சரிக்கை அவசியம்’ என்கின்றனர் டாக்டர்கள்.
