100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்: ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து!

ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதை குழந்தை பிரசவிக்கும் தாய்மார்களுக்கு நிகராக பேசுவார்கள் சினிமா வட்டாரத்தில். அந்த அளவிற்கான கஷ்டங்கள், நஷ்டங்கள் என பல காரணங்களை சொல்வார்கள். பல கோடி முதலீட்டில் துவங்கும் படங்களுக்கு, நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பல யூனியன்களின் பிரச்னைகள், சம்பள பிரச்னைகள், கதை பிரச்னை, தியேட்டர் பிரச்னை என்று நீளும் பட்டியலில், படத்தின் டைட்டில் வைப்பதில் கூட பிரச்னைகள் எழும். அவற்றையெல்லாம் கடந்து ரிலீசானால் பைரஸி எனப்படும் திருட்டு தளங்களில் படத்தை சில கயவர்கள் ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த முதலீட்டிற்கும் ‘ஆப்பு’ வைத்து விடுகின்றனர்.

ஒரு படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகாமல் சில மாதங்கள் தள்ளிப்போனாலே, அப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அனைத்தும் மாறி பட வசூலையும் பாதித்து விடுகிறது. இதற்கு சமீபத்தில் நடந்த உதாரணத்தையே காணலாம். தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா 2’ படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி ரிலீசாவதாக அறிவித்தனர். படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பணப்பிரச்னையால் கோர்ட்டில் வழக்கு போனது. இதனால் ஒரு வாரம் தள்ளி டிச.12ல் ரிலீசானது. ஆனால், அந்த ஒரே வாரத்தில் படத்திற்கான எதிர்பார்ப்பு, வரவேற்புகள் அடங்கி, வசூலை பெற தவறியது. ‘மதகஜராஜா’ போன்ற அரிதினும் அரிதான சில படங்களே பல ஆண்டுகள் கடந்து வந்தாலும் வெற்றி பெற்றுள்ளன.

2115ல் ரிலீஸ்

Image 1534562

இப்படியான நிலையில், ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டாலும், 100 ஆண்டுகள் கழித்தே ரிலீஸ் செய்வோம் என அறிவித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஆம், ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் ஜான் மல்கோவிச் நடித்த ‘100 இயர்ஸ்’ என்ற தலைப்பினாலான இப்படம் 2115ல் நடக்கும் விஷயங்கள், சவால்கள் பற்றிய சயின்ஸ் பிக்சன் கதையில் உருவாகியுள்ளது. 2015ல் தயாரான இப்படத்தை 100 ஆண்டுகள் கழித்து 2115ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியே ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ‘நீங்கள் பார்க்கவே முடியாத திரைப்படம்’ என்ற டேக்லைன் உடன் இதனை விளம்பரப்படுத்தவும் செய்துள்ளனர்.

Image 1534563

100 ஆண்டுகள் கழித்து வந்தால் யார் பார்ப்பார்கள்? ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அதுவரை இந்த படத்தை எப்படி பாதுகாப்பார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள் எழலாம். 2115ல் இப்படத்தை பார்ப்பவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே இப்போது நடப்பது போல் கற்பனை செய்துள்ளார்களே என ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காக இந்த ‘வித்தியாசமான’ யுக்தியை செயல்படுத்தியுள்ளனர்.

Image 1534566

மிகவும் ரகசியமான, பாதுகாப்பான இடத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத லாக்கரில் படத்தின் ‘காப்பி’ வைக்கப்பட்டுள்ளது. அந்த லாக்கரில் 100 ஆண்டுக்கான டைம்மர் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணித்துளியாக குறைந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு தானாகவே அன்லாக் ஆகிவிடுமாம். Image 1534564

அதன்பிறகு அதனை எடுத்து, படத்தை ரிலீஸ் செய்வார்களாம். இதனை அறிவிக்கும் விதமாக ‘ரெட்ரோ, இயற்கை, எதிர்காலம்’ என மூன்றுவிதமான டீசர்களையும் வெளியிட்டுள்ள படக்குழு, அந்த டீசரில் இருக்கும் காட்சிகள் படத்தில் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

1000 டிக்கெட்

Image 1534565

அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது என ஆர்வமாக கேட்பவர்களுக்காக உலோகத்தினால் ஆன 1000 விஐபி டிக்கெட்களும் அச்சிடப்பட்டுள்ளதாம். 2115ல் ரிலீசாகும்போது, பிரீமியர் காட்சிக்கான டிக்கெட்டாக இந்த 1000 டிக்கெட்கள் விற்க உள்ளார்களாம். அதனை வாங்கும் நபர்கள், தங்கள் பேரக்குழந்தைகளாவது பார்க்கட்டும் என வாங்கிக்கொள்ளலாம். ‘எப்படியெல்லாம் விளம்பரம் செய்யுறாங்க; படம் வரும் ஆனா வராது; ஆனா இது புதுசா இருக்குண்ணே… புதுசா இருக்கு!’ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source link