சென்னை : ”ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது,” என காங்கிரசின் கோரிக்கையை, தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திட்டவட்டமாக நிராகரித்தார். அதனால், அதிர்ச்சி அடைந்துள்ள தமிழக காங்கிரஸ் தரப்பு, ‘கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை, வரும் தேர்தலில் மக்கள் தீர்மானிப்பர்’ என கருத்து தெரிவித்துள்ளது .
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், தி.மு.க., தலைமையில் அமையும் ஆட்சியில், தங்களுக்கும் பங்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அக்கட்சியின் மேலிட தலைவர்களும், இக்கோரிக்கையை இடைவிடாது கூறி வருகின்றனர்.
ஒத்து வராது
அதற்கு நேரடியாக எந்த பதிலையும் இதுவரை சொல்லாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று நடந்த தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ”ஆட்சியில் பங்கு என்பது தமி ழகத்திற்கு ஒத்து வராது,” என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அந்த தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் எத்தனை கூட்டணி அமைத்தாலும், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியாது. 200 தொகுதிகளில் வெற்றியை எதிர்பார்க்கிறோம்; அதையும் தாண்டி வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட, வரும் தேர்தல் கடினமாக இருக்காது; இது, எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பம். இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 2021 தேர்தலில், ஆட்சிக்கு வந்ததும் செய்யப் போவதை சொல்லி ஓட்டு கேட் டோம்; வெற்றி பெற்றோம். இப்போது, செய்ததை சொல்லி ஓட்டு கேட்கப் போகிறோம்; வெற்றி பெறுவோம்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், அரசியலை தாண்டி என்னை சகோதரராகப் பார்க்கிறார்; என்னை மூத்த சகோதரர் என சொல்லியிருக்கிறார். நானும் அவரை சகோதரராக, குடும்ப உறுப்பினராக பார்க்கிறேன். அரசியலை தாண்டி, எங்களுக்குள் நட்பும் உறவும் நீடிக்கிறது.
திட்டமிட்ட சதி
தி.மு.க., காங்கிரஸ் கூ ட்டணி இணக்கமாக உள்ளது. மற்றவர்கள் நினைப்பது போல கூட்டணிக்குள் எவ்வித சலசலப்பும் இல்லை. ஊடகங்கள் உருவாக்கும் பிம்பம் தான், இரு கட்சிகளுக்கும் இடையேயான பிரச்னை.
ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும்; காங்கிரசுக்கும் தெரியும். கூட்டணியில் சச்சரவு என சொல்வது, கூட்டணியை முறிக்க நடக்கும் திட்டமிட்ட சதி. இந்த சதி குறித்து நாங்கள் கவலைப்படவில்லை; காங்கிரசும் கவலைப்படவில்லை.
அனைத்து இடைஞ்சல்களையும் சமாளித்து, தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற போராடுகிறோம்; வாதாடுகிறோம். அதற்காக எங்கள் பணியை நிறுத்தவில்லை; இது தான் தி.மு.க., அரசின் திறமை.
‘உரிமைக்கு குரல் கொடுப்போம்; உறவுக்கு கை கொடுப்போம்’ என கருணாநிதி கூறியிருக்கிறார். என் கொள்கையும் இது தான். மத்திய பா.ஜ., அரசை, இந்த கொள்கை அடிப்படையில் தான் அணுகி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஆட்சியில் பங்கு விவகாரத்தில், தி.மு.க., தலைமை தன் முடிவை தெரிவித்து விட்டதால், காங்கிரசின் கூட்டணி நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து, காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். தி.மு.க., – காங்., கூட்டணி பற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது; பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை அறிவுறுத்தியுள்ளது.
”காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள், கூட்டணியை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. கூட்டணி குறித்து ஏதும் சர்ச்சை ஏற்பட்டால், அதை பேசி தீர்த்துக் கொள்வோம்,” என்றார்.
காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வர். கடந்த 2006 சட்டசபை தேர்தலில், மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது, காங்கிரசின் தவறு’ என கூறியுள்ளார்.
காங்கிரஸ் தேசிய தரவு மேலாண்மை பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள், ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும்போது, தமிழகம் மட்டும் தனித்துவம் என்ற போலி பிம்பத்திற்கு பின்னால் ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களை போல் கூட்டணி அரசு அமைவதில், தமிழக மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது, தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு அவசியம்’ என கூறியுள்ளார்.
