ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான மனு ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

– டில்லி சிறப்பு நிருபர் –

‘தமிழகத்தில், கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ஸ்டாலினின் வெற்றி செல்லாது’ என அறிவிக்கக் கோரி, அ.தி.மு.க., சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் சைதை துரைசாமி தரப்பு காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறது. உங்களுக்கு மூன்று மாதத்திற்கு மேல் அவகாசம் வழங்கியும் கூட, வழக்கிற்கு தேவையான போதுமான ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கவில்லை.

வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறீர்களே தவிர, எந்த வீடியோ, என்ன ஆதாரம் என்பதை நீங்கள் எங்களுக்கு காட்ட மறுக்கிறீர்கள்.

நீங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களில், நிரூபிக்கும் படியாக தரவுகள் எதில் உள்ளது என்பதை தெளிவுப்படுத்துங்கள். முறையான ஆதாரம் இல்லாமல் நீதிமன்றத்தில் வாதிட வரக்கூடாது.

இந்த வழக்கை நாங்கள் இப்போதே தள்ளுபடி செய்ய முடியும். இருந்தாலும் வழக்கை வரும், 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அதற்குள் தேவையான ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link