— நமது டில்லி நிருபர் – :
”அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, பாரத மாதாவை அந்நாட்டிற்கு மத்திய அரசு விற்றுவிட்டது,” என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியதால், பா.ஜ.,வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘காங்கிரசில் இருக்கும் மிகச் சிறந்த முட்டாள் ராகுல்’ என வெளிப்படையாக விமர்சித்தனர்.
லோக்சபா நேற்று கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் முன்வைத்தார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினரும் விமர்சித்ததால் சபையில் அனல் பறந்தது.
அழுத்தம்
லோக்சபாவில் ராகுல் நேற்று பேசியதாவது:
பாரத மாதாவை பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு விற்று விட்டார். அதற்கு என்ன காரணம் தெரியுமா? பிரதமர் மோடியை அமெரிக்கா மிரட்ட ஆரம்பித்து விட்டது. பிரதமரின் கழுத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிடித்துவிட்டார்.
மத்தியில், ‘இண்டி’ கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தால் என்ன செய்து இருக்கும் தெரியுமா? முதலில் நம் நாட்டை சமமாக நடத்த வேண்டும் என அமெரிக்காவிடம் சொல்லி இருக்கும்.
கோடிக்கணக்கான மக்கள் தொகையும், அவர்களின் தரவுகளும் தான் நம் நாட்டின் மிகப் பெரிய சொத்து. அமெரிக்கா டாலரை பாதுகாக்க விரும்பினால், இந்திய தரவுகள் தான் மிகப் பெரிய சொத்து என்பதை அங்கீகரிக்க வேண்டும் என வற்புறுத்தி இருப்போம்.
இரண்டாவதாக, இந்த சொத்து வேண்டுமெனில், எங்களுடன் சரிசமமாக பேச்சு நடத்த வேண்டும் என சொல்லி இருப்போம். நம் எரிசக்தி பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது.
மூன்றாவதாக, அமெரிக்காவிலும் விவசாயிகளின் ஓட்டு முக்கியம் என்பதை அறிவோம்.
எனவே, அமெரிக்க விவசாயிகள் உங்களுக்கு முக்கியம் எனில், எங்கள் நாட்டு விவசாயிகளை நாங்கள் பாதுகாப்போம் என டிரம்பிடம் கறாராக பேசி இருப்போம்.
பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் காலை உணவு சாப்பிட டிரம்ப் முடிவெடுத்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் முடிவு எடுக்கும் என அழுத்தம் கொடுத்து இருப்போம்.
சமரசம்
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, நாம் யாரிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அந்நாடு முடிவு செய்கிறது. நம் பிரதமர் முடிவு செய்யவில்லை. அவர்களது கண்காணிப்பு வளையத்தில் நம்மை கொண்டு வந்திருக்கின்றனர்.
இந்தியா வேறு எங்காவது கச்சா எண்ணெய் வாங்கினால், நம்மை தண்டிக்கின்றனர்; அபராத வரி விதிக்கின்றனர். வல்லரசுகளின் ஆதிக்க சகாப்தம் முடிந்து, எரிசக்தி மற்றும் நிதி உள்ளிட்ட விவகாரங்கள் பூகோள அரசியலை தீர்மானிக்கும் ஆயுதங்களாக உருவெடுத்துள்ளன.
இதை உணராமல், அந்த ஆயுதங்களை நீங்களே அமெரிக்காவிடம் வழங்கிவிட்டீர்கள். நம் எரிசக்தி வளத்தின் மீது அமெரிக்கா அதிகாரம் செலுத்த துணிந்து விட்டது.
இதன் மூலம், நம் தேசத்தின் நலனில் சமரசம் செய்து விட்டீர்கள். பாரத மாதாவை அமெரிக்காவிடம் விற்று விட்டீர்கள். இப்படி செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
இதற்கு முன், எந்தவொரு பிரதமரும் இப்படி செய்தது இல்லை. பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது. எப்ஸ்டீன் பைல்கள், அதானி மீது அமெரிக்காவில் நடந்து வரும் வழக்கு ஆகியவற்றால், பிரதமர் முழுதாக சரணடைந்து விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுலின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., ‘காங்கிரஸ் முகாமில் இருக்கும் மிகச் சிறந்த முட்டாள் ராகுல். பார்லி.,யின் கண்ணியத்தை காக்க தவறிவிட்டார். தரக்குறைவாக அவர் பேசியுள்ளார்’ என விமர்சித்துள்ளது.
மோசம்
இதுகுறித்து பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ”பார்லி.,யின் மரபுகளை ராகுல் துளி கூட மதிக்கவில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி இருக்கிறார்.
”பார்லி.,யில் அவரது நடத்தை, பேச்சு, உடல்மொழி அனைத்தும் மோசமாக இருந்தது. தேச நலன், வளர்ச்சி பற்றி பேச வேண்டிய சபையில், அரசியலை பேசி பார்லி.,யின் கண்ணியத்தை ராகுல் குறைத்துவிட்டார்,” என்றார்.
படிக்காமல் வந்து பேசும் ராகுல் நம் தரவுகள் வெளிநாட்டுக்கு செல்வதாக ராகுல் கூறுவது தவறு. எதுவுமே தெரியாமல் வாய்க்கு வந்தபடி அவர் உளறுகிறார். பட்ஜெட்டை ஒழுங்காக படிக்காமலேயே, எங்களுக்கு அறிவுரை சொல்ல மட்டும் சபைக்கு வருகிறார். நாட்டை விற்பதாகவும், சரண் அடைந்து விட்டதாகவும் அவர் கூறுகிறார். 2013ல், உலக வர்த்தக அமைப்புக்கு சென்று பாலி ஒப்பந்தத்தில், நாட்டின் நலனுக்கு எதிராக கையெழுத்திட்டது யார்? இதனால், 2017 முதல், விவசாயக் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம், காங்., தான். -நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,
ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைக்கிறார். அதற்கு அமைச்சர்கள் பதில் கூற முயலும்போது, காது கொடுத்து கேட்காமல் ஓடிவிடுகிறார். இது தான் அவரது வாடிக்கையாக இருக்கிறது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமான நபர் நமக்கு கிடைக்காதது பெரும் துரதிருஷ்டம். ராகுலின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களை தராவிட்டால், கடுமையான பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். நம் நாடு விற்பனை செய்யப்படவில்லை; தீவிர வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. – கிரண் ரிஜிஜு, பார்லி., விவகார அமைச்சர், பா.ஜ.,

