'ஹெல்மெட்' தடை சரியா * ரவுண்ட் அப்

மிலன்: இத்தாலியின் மிலன், கோர்டினோவில் 25வது குளிர்கால ஒலிம்பிக் நடக்கிறது. இதில் உக்ரைன் பனிச்சறுக்கு வீரர் விளாடிசிலாவ் ஹெராஸ்கெவிச் அணிந்திருந்த ‘ஹெல்மெட்’ சர்ச்சையை கிளப்பியது. ரஷ்யா தொடுத்த போரில் கொல்லப்பட்ட சக நட்சத்திரங்கள் அலினா (பளுதுாக்குதல்), இஷ்சென்கோ (குத்துச்சண்டை), லாகினோவின் (ஐஸ் ஹாக்கி) படங்களை ‘ஹெல்மெட்டில்’ ஒட்டி இருந்தார். இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. எதிர்ப்பை தெரிவிக்க, கையில் கருப்பு நிற பட்டை அணிந்து கொள்ளலாம் என ஹெராஸ்கெவிச்சிற்கு அறிவுறுத்தியது.

வருவாரா ரொனால்டோ

ரியாத்: சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியில் இருந்து அல்-நாசர், அல்-ஹிலால், அல்-இடிஹாத், அல்-அஹ்லி கால்பந்து கிளப் அணிகள் நடத்தப்படுகின்றன. அல்-நாசர் அணிக்காக போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ, 41, விளையாடுகிறார். திடீரென அல்-ஹிலால் அணிக்காக பிரான்ஸ் முன்னணி வீரர் பென்சிமா, 38, ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ரொனால்டோ அதிருப்தி அடைந்தார். இன்று நடக்க உள்ள ஆசிய சாம்பியன்ஸ் லீக் ‘ரவுண்ட்-16’ போட்டியில் (அல்-நாசர்- துர்க்மெனிஸ்தானின் அர்கடாக் அணி) ரொனால்டோ பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

தப்பினார் அன்டோனலி

சான் மரினோ: இத்தாலியின் இளம் ‘பார்முலா-1′ கார் பந்தய வீரர் கிமி அன்டோனலி, 19. மெர்சிடஸ் அணிக்காக பந்தயங்களில் பங்கேற்கிறார். கார் விபத்தில் சிக்கிய இவர், காயமின்றி தப்பினார். இது பற்றி மெர்சிடஸ் அணி வெளியிட்ட செய்தியில்,”இத்தாலியின் சான் மரினோ சாலையில் மெர்சிடஸ் சூப்பர் காரில் சென்று கொண்டிருந்தார் அன்டோனலி. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அன்டோனலிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்டிராஸ்

* ஆந்திரா, பெங்கால் அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டி, மேற்கு வங்கத்தின் கல்யாணி நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆந்திரா 295, பெங்கால் 629 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆந்திரா 244 ரன்னில் சுருண்டது. இன்னிங்ஸ், 90 ரன்னில் வென்ற பெங்கால் அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

* புனேயில் (மகாராஷ்டிரா) பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராஷ்மிகா, 6-3, 6-2 என ரஷ்யாவின் மிலோவனோவாவை வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்கிதா, 3-6, 6-2, 5-7 என தென் கொரியாவின் பார்க்கிடம் தோல்வியடைந்தார்.

* சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நேற்று துவங்கியது. இதன் தகுதி போட்டியில் அசத்திய இந்தியாவின் நய்ஷா, கன்கன் சாகு, நித்யா, தனிஷா, கவுஷானி, சுஹானா, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

* இந்திய துப்பாக்கிசுடுதல் வீரர்கள் சம்பாஜி பாட்டீல் 22, யாஷ் பிரஷாந்த் சவுத்ரி 27. மகாராஷ்டிரா, பல்ஹர் மாவட்டத்தில் உள்ள மனோர் மையத்திற்கு, பயிற்சிக்காக காரில் சென்றனர். மும்பை-ஆமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கார் விபத்தில் சிக்கியது. இதில் சம்பாஜி, மரணம் அடைந்தார். யாஷ் காயங்களுடன் தப்பினார்.

Source link