ச ந்தை மதிப்பு அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் நான்காவது பெரிய மதிப்புமிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில், எஸ்.பி.ஐ.,பங்கு 1,187 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வர்த்தக முடிவில் பங்கு சுமார் 3.4 சதவீதம் உயர்வுடன் முடிந்தது. இதன் வாயிலாக, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 10.91 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
அதே நேரத்தில், நிப்டி ஐ.டி., குறியீட்டில் ஏற்பட்ட சரிவால் டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10.54 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. இதனால், எஸ்.பி.ஐ., நான்காவது இடத்தைப் பிடித்தது.
நேற்றைய வர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவு வாங்கியதே விலை உயர்வுக்கு காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், டிசம்பர் காலாண்டு முடிவுகள் வலுவாக இருந்ததும் பங்குக்கு ஆதரவாக அமைந்தது. நடப்பு வாரத்தில் மட்டும் எஸ்.பி.ஐ., பங்கு விலை சுமார் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஹெச்.டி.எப்.சி., வங்கிக்கு பிறகு எஸ்.பி.ஐ., இரண்டாவது மிக மதிப்புமிக்க வங்கியாக தொடர்கிறது. இதனை தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ., கோட்டக் மஹிந்திரா, ஆக்சிஸ் ஆகிய வங்கிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
சந்தை மதிப்பு
10.91 லட்சம் கோடி
ரூபாயாக உயர்வு
