சென்னை: தை மாதம் இன்று முடிவடையும் நிலையில், தேர்தல் கூட்டணி முடிவை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பாரா என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., இணைந்ததும், அக்கூட்டணியில் இருந்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கூட்டணியில் இருந்து வெளியேறினார். எனினும், அவரை மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வர, பா.ஜ., முயற்சித்து வருகிறது. ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவரை ஏற்க மறுப்பதால், கூட்டணிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
தேர்தல் நிலைப்பாடு குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என நழுவினார் பன்னீர். கடந்த மாதம் 29ம் தேதி, தேனியில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், ‘அ.தி.மு.க.வில் இணைய தயார்’ என பேட்டி கொடுத்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, ‘பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில், இணைக்க வாய்ப்பே இல்லை’ என அறிவித்தார். அதன்பின் பன்னீர்செல்வம் மவுனமானார். இன்று தை மாதம் முடிய உள்ள நிலையில், தன் தேர்தல் நிலைப்பாட்டை பன்னீர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: எங்களுக்கு தற்போது இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று, எங்களின் ஒற்றை கோரிக்கையான அ.தி.மு.க., ஒன்றிணைப்பு. அது சாத்தியமில்லை என்றால், விஜயின் த.வெ.க.,வுடன் இணைந்து, தேர்தலை சந்திப்பது.
சசிகலா தற்போது தன் ஆதரவாளர்களை சந்தித்து, தேர்தல் செயல்பாடுகள் குறித்து பேசி வருகிறார். சசிகலாவும், பன்னீர்செல்வமும், த.வெ.க.,வுடன் இணைந்து, தேர்தலை சந்திக்கலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் என பன்னீர்செல்வம் கூறினார். இன்றுடன் தை மாதம் முடிகிறது. இனியாவது, தன் தேர்தல் அறிவிப்பை அவர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
