காஞ்சிபுரம்: பரந்துார் விமான நிலைய நில எடுப்பு பிரிவில் பணியாற்றும் சர்வேயர், நிலத்தை அளக்க 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் நிலம், பரந்துார் விமான நிலைய திட்ட பகுதியில் உள்ளது. திட்டத்திற்கு நில எடுப்பு செய்யும் முன், நிலத்தை அளந்து தர, நில எடுப்பு அலுவலகம் எண் ஒன்றில் உள்ள சர்வேயர் சுந்தரவடிவேல், 46, என்பவரை, ரஞ்சித்குமார் அணுகியுள்ளார்.
அதை செய்து முடிக்க, 50,000 ரூபாயை சுந்தரவடிவேல் லஞ்சமாக கேட்டுள்ளார். இதை விரும்பாத ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுறுத்தல்படி, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலகத்தில், சர்வேயர் சுந்தரவடிவேலிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரஞ்சித்குமார் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா உள்ளிட்ட போலீசார், சர்வேயர் சுந்தரவடிவேலை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின், போலீசார் அவரை கைது செய்தனர்.
