புதுடில்லி, ஏப். 18– மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான, 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு, லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது. பெரும்பான்மைக்கு 352 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298; எதிராக 230 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர் . லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பரில், ‘நாரி சக்தி வந்தன்’ என்ற சட்டத்தை மத்திய பா.ஜ., அரசு இயற்றியது. எனினும் இது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின் தான் அமலுக்கு வரும்.
விவாதம்
தற்போதைய நிலவரப்படி, 2027ல் தான், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிவடையும். இதனால், 2029 லோக்சபா தேர்தலில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இதில் விரைந்து செயல்பட முடிவெடுத்த மத்திய அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிட்டது.
இதற்காக, 131வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றும் நோக்கில், காங்., – தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது.
முதல் நாளில், லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை, 543ல் இருந்து 850 ஆக அதிகரிக்க வழிவகை செய்யும், 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டு விவாதம் நடந்தது.
சம்பந்தம் இல்லை
இந்த மசோதா மீதான விவாதத்தில், லோக்சபாவில் நேற்று, காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:
தொகுதி மறுவரையறையை செயல்படுத்துவதற்காக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எனக் கூறி, 131வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை, மத்திய அரசு ஒரு கருவியாக பயன்படுத்த பார்க்கிறது. இது மகளிர் மசோதா அல்ல.
இதற்கும், பெண்கள் அதிகாரமளித்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, 2023லேயே அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது.
தற்போது அரசு முன்மொழிந்துள்ளது, தொகுதி மறுவரையறை. இது நாட்டின் தேர்தல் வரைபடத்தையே மாற்றி அமைக்கும் முயற்சி. அரசின் இந்த நடவடிக்கை, தேச விரோத செயலுக்கு சற்றும் குறைவானதல்ல; இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்த மசோதா பெண்களுக்கானது அல்ல. இதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு இடம் இல்லை.
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் அதிகாரத்தை பறிக்க வேண்டுமென்பது தான் அரசின் நோக்கம். இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பது, அரசுக்கு தெரியும்.
ஆனாலும், பெண்களுக்கு ஆதரவானவர்கள் என்ற செய்தியை பரப்ப, பிரதமர் மோடி முயற்சிக்கிறார். ஜம்மு – காஷ்மீரை எப்படி அதிகாரமற்றதாக மாற்றினரோ, அது போல அனைத்து மாநிலங்களையும், குறிப்பாக, தென் மாநிலங்களை அதிகாரமற்றவையாக மாற்ற முயற்சி நடக்கிறது; அது ஒருபோதும் நடக்காது.
பிரதமர் மோடி, ஒரு மாயாஜால வித்தைக்காரர். ‘மேஜிக்’ காட்டுவது போல, ஒன்றன் மீது ஒன்றை மறைத்து மூன்று மசோதாக்களையும் ஒரே மசோதாவாக ஆக்கி, எடுத்து வந்துள்ளார். இது நிறைவேறாது என்பது தெரிந்ததால், பயத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பா.ஜ., – எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறுகையில், ”பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல், தவறான மொழியை பயன்படுத்துகிறார். ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையை குறிப்பிட்டு அவர் நாட்டையும், ராணுவத்தையும் அவமதிக்கிறார்,” என்றார்.
பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், ராகுலின் கருத்துக்களை சபைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தார். ”பிரதமர் குறித்து ராகுல் பயன்படுத்திய வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானவை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, ராஜ்நாத் வலியுறுத்தினார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவும், ”இத்தகைய வார்த்தைகளை பார்லி.,யில் அனுமதிக்க முடியாது,” எனக் கூறி ராகுலை கண்டித்தார். இதற்கு பதிலளித்த ராகுல், ‘மாயாஜால வித்தைக்காரர்’ என்ற சொல்லை பயன்படுத்த மாட்டேன்,” என்றார்.
தொடர்ந்து பேசிய ராகுல், ”எனக்கும், பிரதமர் மோடிக்கும் மனைவி பிரச்னை இல்லை,” எனக் கூறியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.
அவர் தன் பேச்சின் இறுதியில், ”பிரதமர் மோடி லோக்சபாவில் உரையாற்றிய போது, தற்செயலாக என் மொபைல் போனை பார்த்தேன். ஏப்., 16 என்ற தேதியை காட்ட, ‘கடவுளே… என்ன ஆச்சரியம்…’ என வியந்தேன். அது தான் அந்த, 16ம் எண்.
பிரதமர் உரை நிகழ்த்திய தேதியும், 16. புதிருக்கான விடை அந்த, 16ம் எண்ணில் உள்ளது. நான் சொல்வது யாருக்காவது புரிந்தால், எனக்கு தகவல் அனுப்புங்கள். காரணம், 16ம் எண் தான் அனைத்துக்குமான பதில். அதை நீங்கள் விரைவில் காணப்போகிறீர்கள்,” எனக் கூறி அமர்ந்தார்.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை, 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம். லோக்சபாவில் தற்போதுள்ள, 543 இடங்களில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் மொத்த இடங்கள், 129. இது ஒட்டுமொத்த சபையில், 23.76 சதவீதம்.
தொகுதி மறுவரையறைக்கு பின், சபையின் பலம், 850 ஆக உயரும் போது, இந்த ஐந்து மாநிலங்களின் இடங்கள், 195 ஆக உயரும். இது ஒட்டுமொத்த பலத்தில், 23.87 சதவீதம். இதன் மூலம் எந்த மாநிலமும் நஷ்டமடையாது.
வட மாநிலம், -தென் மாநிலம் என நாட்டைப் பிரிக்க வேண்டாம். அனைத்து மாநிலங்களுக்கும் இந்த பார்லி.,யில் சம உரிமை உண்டு. 1976-ல், ‘எமர்ஜென்சி’ காலத்தின் போது, அப்போதைய பிரதமர் இந்திரா, 42-வது சட்டத்திருத்தத்தின் மூலம் தொகுதி மறுவரையறைக்கு தடை விதித்தார். அன்று தொகுதி மறுவரையறையை தடுத்து மக்களின் உரிமையை காங்., பறித்தது; இன்றும் அதைத் தடுப்பது அதே காங்., தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்., – எம்.பி., பிரியங்கா பேசியதாவது:
ஒருபுறம், மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பெரிய அளவில் பேசப்படுகிறது; மறுபுறம், ஓ.பி.சி., பிரிவினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சிறிய மாநிலங்களின் செல்வாக்கை குறைத்து, ஜனநாயகத்தை சிதைப்பதன் மூலம், அடுத்த தேர்தலுக்கான வலுவான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.
சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் அரசியல் சாதுரியத்தை கண்டு திகைத்து போயிருப்பார். அமித் ஷா இந்த திட்டத்தை உருவாக்கினார்; இப்போது அவரே சிரிக்கிறார். அவர் என் கருத்தை ஒப்புக்கொள்கிறார் என, நினைக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பார்லி.,யை கூட்டுவது, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தாதது, மசோதாவின் வரைவை ஒரு நாளைக்கு முன் பகிர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்க வாய்ப்பளிக்காமல் செய்வது போன்றவை, இத்திட்டத்தின் ஒரு பகுதி.
பா.ஜ., மட்டுமே மகளிர் இட ஒதுக்கீட்டின் ஒரே காவலர் என்பது போல, பிரதமர் மோடியின் பேச்சுகள் உள்ளன. அவரது நாடகத்தை நாட்டின் பெண்கள் நன்கு அறிவர்; இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
விவாதம் நிறைவடைந்ததை அடுத்து, 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மீது, லோக்சபாவில் ஓட்டெடுப்பு நடந்தது. சபையில் மொத்தம், 528 எம்.பி.,க்கள் இருந்தனர். மசோதாவுக்கு ஆதரவாக, 298; எதிராக, 230 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை, அதாவது, 352 எம்.பி.,க்களின் ஆதரவு கிடைக்காததை அடுத்து, மசோதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொகுதி மறுவரையறை, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டில்லியை வீழ்த்தியது தமிழகம்! டில்லியை வீழ்த்தியது தமிழகம். டில்லியின் ஆணவத்தையும், ஆணவத்திற்கு துணை போகும் அடிமைகளையும், 23ல் ஒருசேர வீழ்த்துவோம். ஸ்டாலின் தமிழக முதல்வர், தி.மு.க.,
