புதுடில்லி, டில்லியில் நள்ளிரவு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதாக, அடையாளம் தெரியாத சொகுசு கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 13ம் தேதி, நள்ளிரவு போலீஸ் ஏட்டு மகேந்திராவும், கான்ஸ்டபிள் தீபேஷ் என்பவரும் புதுடில்லி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், பாபா ஆஷாராம் பாபு ஆசிரமம் அருகே, சொகுசு கார் ஒன்று மர்மமான முறையில் நின்று கொண்டிருந்தது.
அங்கு வந்த போலீஸ் ஏட்டு மகேந்திரா, காரின் கண்ணாடி கதவை தட்டி, யார் ஓட்டுவது என கேட்டுக் கொண்டிருந்தார். போலீஸ் சீருடையை திடீரென பார்த்ததும், அந்த சொகுசு கார், உடனடியாக அங்கிருந்து வேகமாக கிளம்பியது. வந்தே மாதரம் சாலையில் வேகமாக சென்றது.
அதை பார்த்த ஏட்டு மகேந்திரா, வேகமாக தன் பைக்கில் அந்த காரை துரத்தினார். ஒரு கட்டத்தில் மேற்கொண்டு செல்ல முடியாமல் அந்த கார் நின்றது. அப்போது, பின்னால் வேகமாக தன் பைக்கில் வந்து கொண்டிருந்த ஏட்டு மீது பின்னோக்கி காரை ஓட்டிய அந்த நபர், ஏட்டு மகேந்திரா மீது வேண்டுமென்றே மோதினார்.
இதில், படுகாயம் அடைந்த ஏட்டு மகேந்திரா துாக்கி வீசப்பட்டார். அதை பார்த்தும், காரை பின்நோக்கி வேகமாக செலுத்தி அங்கிருந்து தப்பினார், அந்த கார் டிரைவர். அதையடுத்து, உடன் சென்ற போலீஸ்காரரால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மகேந்திரா.
அவர் மீது மோதி தப்பிய கார் ஓட்டுனர் மீது, அடையாளம் தெரியாத கார் மோதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
