கோவை: நாட்டில் அதிகரித்து வரும் சைபர் மோசடிகள் மத்தியில், ஆதார் தகவல்களை அணுகும் அதிகாரத்தில் உள்ள

கோவை: நாட்டில் அதிகரித்து வரும் சைபர் மோசடிகள் மத்தியில், ஆதார் தகவல்களை அணுகும் அதிகாரத்தில் உள்ள முரண்பாடு குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கே.ஒய்.சி., செயல்பாடுகளுக்காக ஆதார் விபரங்களை பயன்படுத்த அனுமதி உள்ள நிலையில், அதே தகவல்களை விசாரணைக்காக போலீசார் நேரடியாக அணுக முடியாத நிலை உள்ளது.

ஆதார் அடிப்படையிலான கே.ஒய்.சி., பதிவுகள் வாயிலாக, வங்கி கணக்குகள் திறப்பு, மொபைல் சிம் சரிபார்ப்பு போன்ற செயல்பாடுகள் வேகமாக நடக்கின்றன. ஒருவரின் அடையாளத்தை உடனுக்குடன் உறுதி செய்யும் இந்த அமைப்பு, சேவை வழங்கும் துறைகளுக்கு பெரும் உதவியாக உள்ளது.

இந்த ஆதார் சார்ந்த தகவல்களை போலீசார் குற்ற விசாரணைக்கு பயன்படுத்த சட்டத்தில் இடம் இல்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பான அவசர சூழல்களில் மட்டுமே, மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரியின் அனுமதியுடன் குறிப்பிட்ட தகவல்களைப் பெற முடியும். அதேபோல், உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் சில அடையாள தகவல்கள் பெறலாம். எனினும், விரல் ரேகை, விழித்திரை, போன்ற முக்கிய தகவல்கள் பாதுகாப்பு காரணங்களால் வெளிப்படுத்தப்படுவதில்லை.

இதனால், சைபர் குற்ற விசாரணைகளில் தாமதம் ஏற்படுகிறது. போலி சிம் கார்டுகள், அடையாள திருட்டு, ஆன்லைன் வங்கி மோசடிகள், டிஜிட்டல் அரெஸ்ட்போன்ற பல வழக்குகளில் குற்றவாளிகளை விரைவாக கண்டறிவது சவாலாகவுள்ளது. தேவையான தகவல்களை பெற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, சைபர் பாதுகாப்பு நிபுணர் சுசித்ரா கூறுகையில், ”ஆதார் மையமாக கொண்டு தனிநபர் தகவல் திருட்டு அதிகமாக நடக்கிறது.

மோசடியாளர்கள் பயன்படுத்தும் ‘ டார்க் வெப்’ இணையதளத்தில் 5 டாலருக்கு நம் ஆதார் தகவல்கள் விலை போவதை பார்க்கின்றேன். இதுபோன்ற குற்றங்களை கட்டுப்படுத்துவது அவசியம். போலீஸ் துறையில்சர்வர் பிரத்யேகமாக நவீன பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கி, ஒரு சிறப்பு குழுவை நிர்ணயித்து கட்டுப்பாடுகளுடன் குற்றங்களை விசாரிக்க பயன்படுத்த அனுமதி தரலாம். உயர்மட்ட அதிகாரிகளுக்கு மட்டும் அதற்கான அதிகாரத்தை வழங்கவேண்டும்.

அதிக குற்றங்கள் நடக்கும் இச்சமயத்தில் போலீசாருக்கு இந்த அதிகாரம் தராமல் இருப்பது மேலும், பல குற்றங்களை எளிதாக்கிவிடும்.

டிஜிட்டல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், துறைகள் இடையிலான தகவல் பகிர்வு மற்றும் அணுகல் தொடர்பான கொள்கைகள் தெளிவாகவும் சமநிலையுடனும் அமைய வேண்டியது அவசியம், ” என்றார்.

சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘குற்றவாளிகளின் புகைப்படம், கை ரேகை, பெயர் போன்றவற்றை பயன்படுத்தி ஆதார் வாயிலாக நாடு முழுவதும் எளிதாக டிராக் செய்யலாம். தொலைதொடர்பு, வங்கிகளின் ஒத்துழைப்பு இன்றி,பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாருக்கு இந்த அதிகாரம் வழங்கப்படவில்லை,’ என்றனர்.

Source link