நாட்டின் முதல் இசை சாலை : மும்பை கடலோரம் அமைப்பு

மும்பை: மிதமான வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘ஜெய் ஹோ’ என்ற பாலிவுட் இசை ஒலிக்கும் சாலையை ஹங்கேரி தொழில்நுட்பத்தில் மும்பை கடற்கரையோரம் அமைத்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகராட்சி சார்பில் நரிமன் பாயின்டில் இருந்து வோர்லி நோக்கிச் செல்லும் கடற்கரை சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் இசை பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹங்கேரி தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட இந்த இசை பட்டைகள் மீது வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ., வேகத்தில் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பாலிவுட் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஜெய் ஹோ’ பாடலின் மெட்டாக ஒலிக்கும்.

இந்த இசை சாலை பகுதியை மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்த யோசனையை முன்வைத்த முன்னாள் சிவசேனா எம்.பி., ராகுல் ஷேவாலே, ஹங்கேரி தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜப்பானில் 2007ல் முதன் முதலாக அறிமுகமான இந்த இசை சாலை திட்டம், ஹங்கேரி, தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. நம் நாட்டில் முதல் முறையாக தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

Source link