கல்விக்காக வெளிநாடுகள் செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிவு

புதுடில்லி:

வெளிநாடுகளில் உயர் கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக சரிந்துள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ராஜ்யசபாவில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜூம்தார் எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்ற பணியகம், கடந்த 2023 முதல் 2025 வரை வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி கற்பதற்காக கடந்த 2023ல் 9.08 லட்சம் இந்திய மாணவர்கள் சென்றுள்ளனர். இது 2024ல் 7.7 லட்சமாகவும், கடந்த ஆண்டு 6.26 லட்சமாகவும் குறைந்துள்ளது.

தனிநபர் விருப்பம் மற்றும் தேர்வைப் பொறுத்தது வெளிநாட்டுப் படிப்பு. இது தவிர மலிவு விலையில் கிடைக்கும் படிப்பு வாய்ப்பு, எளிதாக வங்கிக் கடன் பெறுதல், குறிப்பிட்ட படிப்புக்கு உள்ள மவுசு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. புதிய கல்வி கொள்கை 2020ன் படி நம் நாட்டில் உயர் கல்வியின் தரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதில், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், அங்கீகாரத்தை வலுப்படுத்துதல், ஆராய்ச்சி, புதுமைகளை ஊக்குவித்தல், டிஜிட்டல் தொழில்நுட்ப கல்வியை விரிவுபடுத்துதல் போன்ற அம்சங்கள் அடங்கும்.

உலக தரமான கல்வியை நம் நாட்டில் வழங்குவதற்காக 14 வெளிநாட்டு பல்கலைகளின் கிளைகளை இங்கு நிறுவ ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link