`ஒலிம்பிக்ஸ், மணிப்பூர் பெண்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்களா பெண்களின் ரட்சகர்கள்?' பிரியங்கா காட்டம்

கடந்த 16-ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நேற்று வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது.

இதையொட்டி, இன்று டெல்லியில் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“நேற்று நடந்த தொகுதி மறுவரையறை தோல்வி என்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய வெற்றி. நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மாற்றவும், நமது ஜனநாயக அடித்தளத்தைப் பலவீனப்படுத்தவும் அரசாங்கம் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது அரசியலமைப்பு சட்டத்திற்கும், நாட்டிற்கும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி – இது ஆளும் கட்சித் தலைவர்களின் முகங்களிலேயே தெளிவாகத் தெரிந்தது.

நாடாளுமன்றம்

சதி திட்டம்

இந்த கூட்டத்தொடர் திடீரென அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கூட்டத்தொடருக்கு ஒரு நாள் முன்பு வரை வரைவு விவரங்கள் யாருக்கும் தெரியாது.

தாங்கள் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இடஒதுக்கீட்டை இணைப்பதன் மூலம், சாதி வாரியான கணக்கெடுப்பைத் தவிர்க்கவும், 2029-ம் ஆண்டு வரையில் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்கவும் அவர்கள் முயன்றனர்.

ஒலிம்பிக்ஸ்… மணிப்பூர்

பெண்களின் ரட்சகராக இருப்பதைச் செயல்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். உன்னாவ், ஹத்ராஸ் சம்பவங்களின் போதும், டெல்லி வீதிகளில் நமது ஒலிம்பிக் வீராங்கனைகள் போராடியபோதும் என்ன நடந்தது என்பதைப் பெண்கள் பார்த்திருக்கிறார்கள்.

மணிப்பூர் பெண்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் பார்த்திருக்கிறார்கள். திடீரென்று நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு தாங்கள்தான் ‘பெண்களின் மீட்பர்’ என்று உரிமை கொண்டாடுவது அப்பட்டமான நாடகம்.

இது இடஒதுக்கீடு பற்றியது அல்ல… இது தொகுதி மறுவரையறை பற்றியதும், சாதி ரீதியான தரவுகளைத் தவிர்ப்பது பற்றியதுமாகும்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

கருப்பு நாள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் தோல்வியைத் தழுவிய அதிர்ச்சியில் அரசாங்கம் இதை ஒரு ‘கருப்பு நாள்’ என்று அழைக்கிறது.

அவர்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், ஒருமித்த கருத்து நிலவிய 2023-ம் ஆண்டு சட்டத்தைக் கொண்டு வந்து, சிறிய திருத்தங்களைச் செய்து, உடனடியாகச் செயல்படுத்தியிருப்பார்கள்.

தொகுதி மறுவரையறை போன்ற சிக்கலான நடைமுறைகளுடன் இதை இணைப்பதன் மூலம் பெண்களைத் திசைதிருப்பக் கூடாது. அவர்களின் உரிமைகளை இப்போதே வழங்குங்கள்”.

Source link