புது டெல்லி,
ரஷியா தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவிற்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் தனது வரவேற்புரையில், இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்புமிக்க மற்றும் உயரிய நீண்டகால கூட்டாண்மையை வலியுறுத்தினார்.
மேலும், இசை என்பது மொழிபெயர்ப்பு தேவைப்படாத ஒரு உலகளாவிய மொழியாக திகழ்ந்து, ரஷியா மற்றும் இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு கலாச்சார பாலமாக அமையுமாறு செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இசை நிகழ்ச்சியில், பியோட்டர் சாய்கோவ்ஸ்கி, மிகைல் கிளிங்கா மற்றும் செர்ஜி ராக்மானினோப் போன்ற உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர்களின் ரஷிய செவ்வியல் இசை படைப்புகள் இடம்பெற்றன.
மாஸ்கோ மாநில கன்சர்வேட்டரியின் பட்டதாரியும், சர்வதேச போட்டிகளின் வெற்றியாளருமான பியானோ கலைஞர் வேரா டெல்மாச்சின்ஸ்காயா மற்றும் புது தில்லியிலுள்ள ரஷிய தூதரகத்தை சேர்ந்த திறமையான ஓபரா பாடகி எகடெரினா ஷெபாலினா ஆகியோர் இணைந்து இப்படைப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்வில், இந்திய அரசாங்க அதிகாரிகள், கலாச்சார மற்றும் கல்வி வட்டாரங்களின் பிரதிநிதிகள், சிஐஎஸ் நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட நட்பு நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
