புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பார்லியில் தோல்வி அடைந்த நிலையில், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு, பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தொகுதி மறுவரையறை மசோதா நேற்று பார்லியில் தோல்வியடைந்தது. பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 எம்பிக்களும் ஓட்டளித்தனர். இருப்பினும், இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற முடிவில் மத்திய அரசு இருந்து வருகிறது.
இந்த நிலையில், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில் உத்தரபிரதேசம், பீஹார், டில்லி, கோவா, குஜராத், அருணாசல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பாஜ ஆளும் மாநிலங்களில் ஒருநாள் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை கூட்டுமாறு தேசிய தலைவர் நிதின் நபின் உத்தரவிட்டார். இந்தச் சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற பரிந்துரைத்தார்.
