மயிலாடுதுறை: “வட நாட்டுக்கு எச்சரிக்கை விடும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் உயர்ந்து விட்டார்,” என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து, வைகோ பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: தி.மு.க., அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
ஏழை, எளிய குழந்தைகள் பயன்பெறும் காலை சிற்றுண்டி திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு, வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இனி, வருங்காலத்தில் என்னென்ன திட்டங்களை எல்லாம் செய்து காட்டுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
மேகதாதுவில் அணைக்கட்ட, 5900 கோடி ரூபாயை கர்நாடகா அரசு ஒதுக்கி உள்ளது. அந்த அணையை கட்டினால், காவிரியில் நீர் வராமல், பஞ்சம் ஏற்பட்டு, பட்டினி பிரதேசமாக, எத்தியோப்பியா போல, எலும்பும் தோலுமாக பிள்ளைகள் காட்சியளிக்கும், கொடூரம் ஏற்படும்.
இதைக்கண்டு பயந்து, ஊர் ஊராக சென்று வந்தேன். தமிழகத்தின், எதிர்காலத்தை பாதுகாக்க நான் பாடுபடுவேன். வட நாட்டுக்கு எச்சரிக்கை விடும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் உயர்ந்து வருகிறார். தி.மு.க., கூட்டணி, 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். தி.மு.க., தனித்து ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
