தேர்தலில் டெபாசிட் இழப்பு என்றால் என்ன? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? – what is losing deposit mean in indian elections full details

பொதுவாக ஒரு தேர்தல் என்றால் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் போட்டியிடுவார்கள். அந்த தொகுகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்கு செலுத்துவார்கள். வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு, எந்த கட்சி வெற்றிப் பெற்றது? எவ்வளவு வாக்குகள் வித்தியாசம்? தோல்வி யாருக்கு? என்றெல்லாம் அறிவிப்பு வெளியாகும். அந்த சமயத்தில் டெபாசிட் காலி அல்லது டெபாசிட் இழப்பு என்ற ஒரு வார்த்தையை கேள்விப்பட்டு இருப்போம்.

வெற்றி, தோல்வி என்றால் நமக்கு தெரியும். அதென்ன டெபாசிட் இழப்பு? என்றாக்காவது யோசித்து பார்த்து இருக்கின்றீர்களா? ஆம், நம்மில் பல பேருக்கு இந்த டெபாசிட் இழப்பு பற்றி தெரியாமலே இவ்வளவு நாள் இருந்திருக்கும். தற்போது, இந்த பதிவில் தேர்தல் சமயத்தில் சொல்லப்படும் டெபாசிட் இழப்பு என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை சுருக்கமாகவும், எளிமையாகவும் தெரிந்துக் கொள்வோம்.

டெபாசிட் என்றால் என்ன?

தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் அதற்கான விண்ணப்பம் பெற்று தம்முடைய தகவல்களை விரிவாக குறிப்பிட்டு அதனை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும். இதை தான் வேட்புமனு தாக்கல் செய்வது என்பார்கள். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 1951-இன் படி தேர்தலில் போட்டியிடும் நபர் குறிப்பிட்டத் தொகையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வைப்புத் தொகையாக (டெபாடிட்) செலுத்த வேண்டும். விளையாட்டாக இல்லாமல் தேர்தலில் உண்மையிலேயே போட்டியிட விரும்புவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செல்வதை உறுதி செய்வதற்காக இந்த டெபாசிட் தொகை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் டெபாசிட் தொகை எவ்வளவு?

இந்தியாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களுக்கும் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையை கண்டிப்பாக செலுத்த வேண்டும். இருப்பினும், தேர்தலை பொருத்து டெபாசிட் தொகை மாறுபடும். அதாவது, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் 25,000 ரூபாயை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் இதில் பாதி தொகையை, அதாவது 12,500 ரூபாய் செலுத்தினால் போதும்.

அதேசமயம், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கல் 10,000 ரூபாயும், பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் 5,000 ரூபாயும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பட்டியலியன மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 5,00 ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 1,000 ரூபாயும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாயும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். இதர பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 1,000 ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாயும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 4,000 ரூபாயும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

டெபாசிட் இழப்பு என்றால் என்ன ?

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு போட்டியிட்ட வேட்பாளர் அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஒருவேளை ஆறில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளைலோ அல்லது சரியாக ஒரு பங்கு வாக்கைப் பெற்றாலோ, அந்த வேட்பாளருக்கு டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படாது. இதையே டெபாசிட் இழப்பு அல்லது டெபாசிட் காலி எனப்படுகிறது. இப்படி தேர்தல் ஆணையத்திற்கு கிடைக்கும் டெபாசிட் பணமானது அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்தத் தொகையை தேர்தல் ஆணையம் தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும்.

டெபாசிட் தொகை செய்யப்பட்ட தொகை திரும்ப கிடைக்குமா?

வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது செலுத்தப்படும் இந்த டெபாசிட் தொகையை வேட்பாளரிடமோ அல்லது அவரைச் சார்ந்தவரிடமோ தேர்தல் முடிந்த பிறகு திருப்பி தரப்படும் என்ற விதியும் உள்ளது. அதாவது, வேட்பாளர் பட்டியலில் வேட்புமனு அளித்தவரின் பெயர் வராமல் இருந்தால் தேர்தல் ஆணையம் அவருடைய டெபாசிட் தொகையை திரும்ப அளித்துவிடும். அதேபோல், தேர்தலுக்கு முன்பே வேட்பாளர் மரணமடைந்தாலும் அவர் கட்டிய தொகை திரும்ப வழங்கப்படும்.

விஜய் கட்சி எத்தனை தொகுதிகளிலும் வெல்லும்? மக்கள் கருத்து என்ன?

அதேபோல், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தால் டெபாசிட் தொகை வேட்பாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும். தேர்தல் ஆணையத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் பணம் திரும்ப வழங்கப்படும். மேலும், வேட்புமனுவை திரும்பப் பெற கடைசித் தேதிக்குள் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கிக் கொண்டாலும் கட்டிய பணம் திருப்பி கொடுக்கப்படும்.

Source link