சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, தமிழ்நாட்டில் 23.04.2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவல் துறையினருக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு 15.04.2026 அன்று நடைபெற்றது.
மேலும், சென்னை மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபடவுள்ள 20,043 காவலர்கள் ஊர்க்காவல் படையினரும் தேர்தல் அத்தியாவாசியப் பணியில் ஈடுபடும் 417 பணியாளர்களும், 1,788 நுண் பார்வையாளர்கள், இதர அலுவலர்கள் பணியாளர்கள் என மொத்தம் 22,248 நபர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று 18.04.2026 சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த மையத்தில் காவல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தங்கள் தபால் வாக்கினை செலுத்தினர்.
மேலும், இன்று வர இயலாத காவலர்களுக்கு 20.04.2026 அன்றும், நுண் பார்வையாளர்கள், அத்தியாவசியப் பணி மேற்கொள்ளும் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு 19.04.2026, 20.04.2026 அன்றும் தபால் வாக்குப்பதிவு நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
