தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ந் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் 3வது கட்சியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் காண உள்ளது.
மேலும், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ளார். இதனால், அத்தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, முதலமைச்சர் வேட்பாளர்களாக உள்ள மு.க.ஸ்டாலினோ, எடப்பாடி பழனிசாமியோ இரு தொகுதிகளில் போட்டியிடாத நிலையில், விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பேசும்பொருளானது. அத்துடன், குறிப்பாக அந்த தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன என பல்வேறு கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில், பெரம்பூர் தொகுதியானது சென்னை மாவட்டத்திலேயே அதிகமான வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும். கிட்டத்தட்ட 70 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வாக்குகள் உள்ளன. குறிப்பாக, இந்த தொகுதியில் மட்டும் தவெகவுக்கு 45 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுவதால், விஜய் இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், திருச்சி கிழக்கு குறிப்பிடத்தக்க அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியாகும். இதனால், விஜய் இந்த தொகுதியை தேர்வு செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஆனால், தமிழக தேர்தல் அரசியலில் ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடும் நடைமுறை புதிதல்ல. காரணம் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 1991 சட்டமன்றத் தேர்தலில் காங்கேயம் மற்றும் பர்கூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். பின்னர், பர்கூர் தொகுதியை தக்கவைத்து கொள்வதற்காக காங்கேயம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதன்பிறகு, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவிற்கு பிறகு இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் தலைவராக உருவெடுத்து இருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
இதுமட்டுமல்லாமல், 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வதோதரா மற்றும் வாரணாசி என்ற இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார்.
2026 அரசியல் களத்தில் போட்டி யாருக்கு?
இதிலிருந்து இரு தொகுதிகளில் போட்டியிட்ட மூத்த அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலமைச்சர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் போன்ற முக்கிய பதவிகளில் உள்ளனர். இதை மனதில் வைத்தே 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
