சேலம் ஜங்ஷன் எதிரில் 10 மாடி ரேடிசன் ஸ்டார் ஓட்டல்… வருகிறது 2 வது பிரம்மாண்டம்! – radisson hotel group another major project coming opposite salem junction

சேலம் மாநகரில் அடுத்தடுத்து புதிய வசதிகள் வரிசை கட்டி வருவதற்கு காத்திருக்கின்றன. முன்னதாக ஜங்ஷன் மெயின் ரோட்டில் 7 மாடி ஓட்டல் புரோஜக்ட் வருகிறது என்று தகவல் வெளியான நிலையில், தற்போது 10 மாடி ரேடிசன் ஸ்டார் ஓட்டல் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலத்தில் ஜங்ஷன் மெயின் ரோட்டில் உள்ள ரிலையன்ஸ் மாலுக்கு எதிரில் 7 மாடிகள் கொண்ட பெரிய ஓட்டல் ஒன்று கட்டப்படுவதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு பின்புறத்தில் தான், இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், தங்குமிடங்கள் எனப் பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன. இது சேலம் மாநகர மக்களுக்கு ஏற்படுத்திய ஆச்சரியம் அடங்குவதற்குள், அடுத்த பிரம்மாண்ட திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேடிசன் ஸ்டார் ஓட்டல் குரூப் மெகா திட்டம்

அதாவது, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் 10 மாடிகள் கொண்ட ஸ்டார் ஓட்டல் ஒன்று வரப் போகிறது. அதாவது, பிரபல ரேடிசன் ஓட்டல் குரூப் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. இதனுடன் சிவசக்தி ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் நிறுவனம் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னர் தான், ரேடிசன் பிராண்ட் பிராப்பர்ட்டியாக வரப் போகிறதா? இல்லை வேறு ஏதேனும் நிறுவனத்தின் பெயரில் வருகிறதா என உறுதி செய்யப்படும். தற்போதைக்கு ரேடிசன் சேலம் என்ற பெயரில் புதிய திட்டம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பகிரப்பட்டு வருகின்றன.

சேலத்தில் புதிய 10 மாடி ஓட்டலின் வசதிகள்

இதுபற்றி The Salem New எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதன்படி, அடித்தளம், தரைத்தளம், அதன்மேல் 10 மாடிகள் கொண்ட ஸ்டார் ஓட்டல் வரவுள்ளது. தரைத்தளத்தில் லாப்பி, பார் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

முதல் தளத்தில் கிச்சன் மற்றும் உணவகம் இடம்பெறும். இரண்டாவது தளத்தில் ஊழியர்களுக்கான கேஃபிடீரியா மற்றும் ஓட்டுநர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்டவை இருக்கும். மூன்றாவது மாடியில் இருந்து 10வது மாடி வரை ஓட்டல் அறைகள் நிரம்பியிருக்கும். மொத்தம் 95 அறைகள் வரை இடம்பெறும் என்று தெரிகிறது.

கொங்கு மண்டலத்தில் பிரீமியம் வகை தங்கும் வசதி

பேஸ்மெண்ட்டில் வரவுள்ள பார்க்கிங் வசதியை பொறுத்தவரை 45 இருசக்கர வாகனங்கள், 48 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டப்படுகிறது. சேலத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள கிராண்ட் எஸ்டான்சியா, சிஜே பல்லாஸியோ உள்ளிட்டவை உள்நாட்டு பிஸினஸ் டிராவலர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன.

உயர்தர மற்றும் நடுத்தர மேல் வர்க்கத்தினர் தங்கும் வகையில் அமைந்துள்ளன. அதுவே ரேடிசன் சேலம் ஓட்டல்கள் வரும் போது சர்வதேச பிஸினஸ் டிராவலர்களுக்கு பயனளிக்கும். மேலும் கோடீஸ்வரர்கள் இல்ல திருமணங்கள், வரவேற்பு விழாக்கள், சொகுசு டூரிசம் மேற்கொள்பவர்களுக்கு வசதியாக இருக்கும். இதன் அறைகள் மிகவும் பெரியதாக இருக்கும்.

சேலத்தில் ஐடி துறை வளர்ச்சி

​சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் பிரீமியம் வகை வசதிகள் ஆகும். சேலத்தை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்குள்ள ஐடி பார்க் உள்ளிட்ட நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களை சார்ந்த உயர் அதிகாரிகள் வெளி மாநிலங்கள் அல்லது வெளி நாடுகளில் இருந்து வரும் போது ரேடிசன் ஓட்டல் தங்குவதற்கு வசதியாக இருக்கும். மேலும் பாதுகாப்பு துறை சார்ந்த தொழில் வழித்தடமாக சென்னை, ஓசூர், சேலம், கோவை, திருச்சி இருக்கிறது.

டிஃபன்ஸ் முதல் ஸ்டீல் வரை – சேலத்தில் பல்துறை வளர்ச்சி

இந்தப் பகுதியில் பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதற்காக பாதுகாப்புத் துறை திட்ட ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்ல வேண்டி வரும்.

இவர்கள் உயர்தர ஸ்டார் ஓட்டல்களில் தங்க விரும்புவர் என்பதால் ரேடிசன் சேலம் ஓட்டல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். இதுதவிர மெடிக்கல் டூரிசம், டெக்ஸ்டைல், ஸ்டீல் ஆகியவை தொடர்பான வளர்ச்சியும் சேலத்தை மையப்படுத்தி அதிகரித்து வருகிறது. இதை சார்ந்து வந்து செல்வோருக்கும் ரேடிசன் ஓட்டல் பயனளிக்கும்.