விஜய் பேசும் பஞ்ச் டயலாக் அரசியலில் எடுபடாது: பி.டி.செல்வக்குமார் பேட்டி

நடிகர், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான தி.மு.க.வை சேர்ந்த பி.டி.செல்வகுமார் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை. தந்தை சந்திரசேகர்தான் மகன் வளர்ச்சிக்கு முழு காரணம், முக்கிய காரணம். ஆனால் சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை. விஜய் கூட இருக்கக்கூடிய உறவை முறிப்பதற்கு சந்திரசேகர் விரும்பமாட்டார். ஆனால் மகன் விஜய் தந்தை சந்திரசேகரை விட்டுக் கொடுத்து விட்டார். ஜனநாயகன் படத்தை பொறுத்தவரை படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. சென்சார் பிரச்சினையை தீர்க்க வேண்டியது படக்குழுதான். சென்சார் பிரச்சினையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது.

இதனை படக்குழுதான் சரி செய்திருக்க வேண்டும். பழி போடுவது ஈசி. ஆனால் மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தி.மு.க., பா.ஜ.க. யாரும் படம் வெளியிடுவதை தடுக்கவில்லை. ஆர்.கே.செல்வமணி படம், விஸ்வரூபம் போன்ற பல படங்கள் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்துள்ளது. அதே போன்றுதான் ஜனநாயகன் படமும். இந்த பிரச்சினையை தீர்த்த பின்பு தான் தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும். உங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டு பிறர் மேல் பழி போடுவது தவறு. நடிகர்களை நம்பி போய் வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள் சிலர். படம் வெற்றி பெற்றால், புகழ் வந்தால், கைதட்டல் வந்தால், விசில் அடித்தால் எல்லா புகழும் உங்களுக்கு. பிரச்சினை வந்தால் மட்டும் நீங்கள் காரணம் இல்லையா? பிரச்சினையை சரி செய்ய வேண்டியது யார்? சென்சார் வரவில்லை என்றவுடன் மத்திய அரசு தான் பிரச்சினை என்று கூறுகிறீர்கள்.

முழுக்க, முழுக்க இது விஜய்யோட தவறுதான். நடிகர்கள் பின்னால் போனால் வாழ்வாதாரம், தொழிலில் முன்னேறி இருக்கின்றேன் என்று யாராவது சொல்ல முடியுமா? நடிகர்கள் பின்னால் யாரும் போகாதீர்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஆகியோர் சினிமாவில் நடித்துள்ளார்கள். தி.மு.க. வேற, சினிமா நடிகன் வேற. விஜய் பக்குவப்பட்டவர்களை கூட வைத்திருக்க வேண்டும். சென்ட்ரல் ஜெயிலில் உள்ளவர்களை கூட வைத்தால் எப்படி கட்சி வளரும். ஆதவ் அர்ஜுனா என்பவர் யார்? நல்லவர்களை கூட வைக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக ஆதவ்அர்ஜுனாவை கூட வைத்திருக்கலாமா? நிறைய பேர் கொள்ளையடித்து பணத்தை வைத்திருப்பார்கள்.

அப்போது உங்களுக்கும் அந்த எண்ணம் தானே வரும். நல்லவர்களை, சிந்தனையாளர்களை, தெளிவானவர்களை உடன் வைக்க வேண்டும். செய்தியாளர்களை சந்திக்க தைரியம் இல்லை. ஜனநாயகன் படத்தை தமிழ் தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கலாமே. கரூரில் மாநாடு போட வேண்டும் என்று கேட்டது யார்? அப்பாவி மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. 41 பேர் இறந்ததற்கு விஜய் தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்திருப்பார். ஆனால் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான ஸ்டாலின் கரிசனம் காட்டி இருக்கின்றார். சில்க் சுமிதா, கவுண்டமணி, செந்தில், வடிவேல், த்ரிஷா போன்ற நடிகர்கள் கூடினால் கூட கூட்டம் வர தான் செய்யும். அ.தி.மு.க., பா.ஜ.க. கரூரில் நடந்த சம்பவத்திற்கு அப்போது விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள். தற்போது கூட்டணி வரவில்லை என்றவுடன் எதிராக பேசி வருகிறார்கள்.

கூட்டணிக்கு வரவில்லை என்ற காரணத்தினால் இது ஒரு சுய நல அரசியல் செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போது அங்கு சென்ற விஜய் ஏன் மதுரை மாநாட்டில் இறந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை. பப்ளிசிட்டி வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானலும் விஜய் செல்வார். 2026-ல் நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜய் படத்தில் பேசும் பஞ்ச் டயலாக் அரசியலில் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சிம்பு கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Source link