சென்னை: ‘தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை தவிர்க்கக்கூடாது’ என, காவல் துறையினரை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதுடன், ‘பைக் ரேஸ்’ சாகசங்களில் ஈடுபட்டதாக, சென்னை மாநகர போலீசார், 2024ல் இரண்டு வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
கண்காணிப்பு கேமரா
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து காவல் துறை கூடுதல் கமிஷனர் ஆர்.சுதாகரின் அறிக்கையை, மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.
அதன் விபரம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ‘பைக் ரேஸ்’ நடத்தும் நபர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, பைக் ரேசில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் விபரங்களை, காவல்துறை பராமரித்து வருகிறது.
இதுவரை 107 பேர், ‘இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம்’ என உறுதி அளித்துள்ளனர். பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்களின் செயல்கள் குறித்து, பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதி கூறியதாவது: அறிவியல்பூர்வ ஆய்வில், 2022ல், 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். மேலும் 4.43 லட்சம் பேர், விபத்துகளில் காயம் அடைந்து உள்ளனர்.எனவே, பொது சாலைகளில், இதுபோன்ற ஆபத்தான முறையில் போக்குவரத்து சார்ந்த குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள, ஒரு மாதிரி திட்டத்தை, காவல் துறை செயல்படுத்த வேண்டும்.
இப்போது பிரச்னை என்னவென்றால், அனைத்து காவல் துறை அதிகாரிகளும், தேர்தல் பணியில் தான் கவனம் செலுத்துவர்; முழு மாநிலமும் ஸ்தம்பித்து விடும்.தேர்தல் பணியில் முழுமையாக மூழ்கி விட வேண்டிய அவசியமில்லை. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியை மட்டுமே, போலீசார் செய்ய வேண்டும்.
அறிக்கை
சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, வழக்கமான காவல்துறை பணிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கக்கூடாது. தாமதத்திற்கு தேர்தலை காரணமாக கூறக்கூடாது. ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வை, காவல் துறை பின்பற்றவில்லை என்கிற புகார் உள்ளதால், போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாளுவதற்கான திட்டத்தை, வரும் 25ம் தேதிக்குள், காவல் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.
