புதுடில்லி : டில்லி மாநில அரசு விரைவில் துவக்க உள்ள தகவல் தொகுப்பு மையத்திற்காக ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா மாநில அரசுகளின் செயல்பாடுகளை, டில்லி மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
டில்லி மாநிலத்தில் உள்ள மக்கள் நலத்திட்டங்களில் பலனடையும் மக்கள் குறித்த தகவல், மத்திய அரசு வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே உள்ளது.
மாநில அரசு சார்பில், தகவல் தொகுப்பு மையம் இருந்தாலும், அதன் பங்கு சிறப்பாக இல்லை.
இதையடுத்து, டில்லியை ஆளும் பா.ஜ., அரசின் சார்பில், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு சமீபத்தில் சென்ற டில்லி மாநில அதிகாரிகள், அந்த மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள், தகவல் தொகுப்பு மையம் போன்றவற்றை ஆராய்ந்து திரும்பியுள்ளனர்.
எனவே, அந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் தகவல் தொகுப்பு மையத்தின் அடிப்படையில், விரைவில் டில்லியிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன .
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தில் அந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை, டில்லியிலும் செய்ய, மாநில, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது.
