ராகுலுக்கு கடிவாளம் போடும் பா.ஜ.,: எம்.பி., பதவியை பறிக்க நோட்டீஸ்

– நமது டில்லி நிருபர் –

பிரதமர் நரேந்திர மோடி மீதும், மத்திய அரசின் மீதும் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகக் கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, எம்.பி., பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான நோட்டீசை, பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபே வழங்கி உள்ளார். இது ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேறினால், ராகுலின் எம்.பி., பதவி பறிபோகும் சூழல் உருவாகலாம்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் எப்ஸ்டீன் இடையே தொடர்பு இருப்பதாக பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராகுலுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கையாக, அவரை எம்.பி., பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, லோக்சபா பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபே நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

அதன் விபரம்:

பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வெளியுறவு என நம் நாட்டின் முக்கிய அமைச்சகங்கள் அனைத்தையும், ராகுல் தொடர்ச்சியாக இழிவுபடுத்தி வருகிறார்.

இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும், மதிப்பையும் சீர்குலைக்கிறார். முன்னாள் ராணுவ தளபதியின் வெளியிடப்படாத ஒரு புத்தகம் அவரது கைக்கு மட்டும் எப்படி கிடைத்தது?

தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று, நம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

பார்லி., எனும் புனிதமான மேடையில், எம்.பி., அந்தஸ்தை வைத்து, மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில் பேசுகிறார்.

எந்தவொரு உறுதியான ஆதாரங்களோ, ஆவணங்களோ இல்லாமல், அரசின் கண்ணியத்தை குறைத்து, பல்வேறு அரசியலமைப்பு சட்ட அமைப்புகளையும், அவமதித்துள்ளார். எம்.பி., பதவியிலிருந்து ராகுலை நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Image 1535118

இது குறித்து நிஷிகாந்த் துபே கூறுகையில், ”எல்லாவற்றையும் விரிவாக விளக்கி நோட்டீஸ் அளித்துள்ளேன்.

”எம்.பி., பதவியிலிருந்து நீக்குவது மட்டுமின்றி, வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்றார்.

‘சப்ஸ்டான்டிவ் மோஷன்’

நிஷிகாந்த் துபே அளித்துள்ள நோட்டீசில், ‘சப்ஸ்டான்டிவ் மோஷன்’ என்ற பெயரில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த தீர்மானம் என்பது, லோக்சபா விதிகளின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது தகுதி நீக்க தீர்மானம் ஆகியவற்றை போன்றது. அரசியலமைப்பின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு தகுதி நீக்கம் கோரினால், அதற்கு சபாநாயகர் ஒப்புதல் தர வேண்டும். அதற்கென்றே சபையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடத்தப்படும். நோட்டீஸ் அளித்தவர் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். இதற்கான விளக்கத்தை அளிக்க குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு தரப்படும். 50 சதவீத ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறினால், குற்றம் சாட்டப்பட்டவர் தகுதியிழப்பார்.

வாழ்நாள் தடை சாத்தியமா?

எம்.பி., பதவியை இழக்கலாமே தவிர, தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு வாழ்நாள் தடை எல்லாம் ஏற்படுத்தி விட முடியாது. மேலும், நீதிமன்றத்தை நாடி னால், விவகாரம் மேலும் இழுபறியாகும். இந்த தீர்மானம் மிக அரிதாகவே இதுவரை கொண்டு வரப்பட்டுள்ளது. 1997ல் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ., இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. உ.பி., கவர்னராக இருந்த ரொமேஷ் பண்டாரியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்ட தீர்மான நோட்டீசை, அப்போ தைய லோக்சபா சபாநாயகர் சங்மா ஏற்றுக் கொ ண்டதால் பரபரப்பு நிலவியது.

முதன்முறை அல்ல

கடந்த 2019ல் தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடியோடு பிரதமரையும் இணைத்து குறிப்பிடும் வகையில், மோடி மற்றும் திருடர்கள் என்று பெயர்களை ஒப்பிட்டு ராகுல் பேசினார். அதை எதிர்த்து தொடரப்பட்ட அவதுாறு வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து, 2023ல் எம்.பி., பதவியை ராகுல் இழந்தார்.

உரிமை மீறல் இல்லை

தவறான குற்றச்சாட்டுகளை, அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் ஆதாரங்கள் ஏதுன்றி சுமத்தியதற்காக, ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமென்று பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருந்தார். இந்நிலையில், ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கு பதிலாக, அவரது உரையில் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை நீக்க, அரசு தரப்பு முடிவு செய்துள்ளது.

‘துரோகம் செய்கிறீர்கள்’

உரிமை மீறல் தீர்மானம் குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல், ”நீங்கள் முழுமையாக பா.ஜ.,விடம் வேலைக்கு சேரவில்லை; ஓரளவாவது நடுநிலையாக செயல்படுங்கள். இது உண் மையிலேயே வெட்கக்கேடானது. நீங்கள் ஊடகவியலாளர்கள்; நடுநிலையாக இருக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. பா.ஜ., கூறுவதை அப்படியே நீங்களும் கூறாதீர்கள். நீங்கள் இந்த நாட்டிற்கு துரோகம் செய்கிறீர்கள்,” என காட்டமாக கூறினார்.

Source link