அரசு விழாக்களில் வந்தே மாதரம்: ஜமியத் உலமா அமைப்பு எதிர்ப்பு

புதுடில்லி: ‘வந்தே மாதரம் பாடலை அரசு விழாக்களில் பாடுவதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவு ஒருதலைபட்சமானது; தன்னிச்சையானது’ என, முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா – இ – ஹிந்த் தெரிவித்துள்ளது.

வங்க மொழி கவிஞர் பக்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875, நவ., 7ல் வந்தே பாரதம் பாடலை இயற்றினார். 1937ல் இந்திய தேசிய காங்கிரஸ், வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக ஏற்றுக்கொண்டது. மொத்தமுள்ள ஆறு சரணங்களில், இரண்டு சரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மற்ற நான்கு சரணங்கள், ஹிந்து கடவுள்களை போற்றும் வகையில் இருந்ததால், முஸ்லிம் தலைவர்கள் மனதில் வெறுப்புணர்வை துாண்டும் என கருதி, அவற்றை நீக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தேசிய கீதத்துக்கு மரியாதை தருவதுபோல் தேசிய பாடலான வந்தே மாதரம் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில், ‘அதிகாரப்பூர்வ அரசு விழாக்கள், பள்ளிகளில் காங்கிரஸ் காலத்தில் நீக்கப்பட்ட நான்கு சரணங்களும் சேர்த்து ஆறு சரணங்களும் அடங்கிய வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும்’ என உத்தரவிட்டது.

இதற்கு, முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா – இ – ஹிந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறியுள்ளதாவது:

அனைத்து அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகள், கல்லுாரிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளும் பாடப்பட வேண்டும் என்பது ஒருதலைபட்சமான மற்றும் தன்னிச்சையான முடிவு.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் மட்டுமல்ல; சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகளை குறைக்கும் திட்டமிட்ட முயற்சியும் கூட.

முஸ்லிம்கள் யாரும் வந்தே மாதரம் பாடுவதையோ, இசைப்பதையோ தடுப்பதில்லை. ஆனால், பாடலின் சில வரிகள், தாயகத்தை ஒரு தெய்வமாக சித்தரிக்கும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டுள்ளன. இவை, மதங்களின் அடிப்படை நம்பிக்கைக்கு முரணானவை.

ஒரு இஸ்லாமியன் ஒரே அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதால், இந்த பாடலை பாடும்படி கட்டாயப்படுத்துவது அரசியலமைப்பு மீறலாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link