நியூயார்க்: அமெரிக்காவில், போலீஸ் அதிகாரி கார் மோதி பலியான இந்திய மாணவியின் குடும்பத்தினருக்கு, 260 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, சியாட்டில் நகர நிர்வாகம் சமரசம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி கந்துல்லா, 23, என்ற மாணவி, கடந்த 2023ல் அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் முதுநிலை படிப்பு படித்து வந்தார்.
இவர் சவுத் லேக் யூனியன் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சியாட்டில் போலீஸ் அதிகாரி கெவின் டேவ் அதிவேகத்தில் ஓட்டி வந்த ரோந்து கார் மோதியது.
மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவேண்டிய இடத்தில் 119 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஜான்வி மீது கெவின் டேவ் மோதினார். இதில் 100 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டு ஜான்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளான டேனியல், மைக்சோலன் ஆகியோர் ஜான்வி மரணத்தை கேலி செய்து பேசிய தொலைபேசி உரையாடல் வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
‘இறந்த பெண் சாதாரணமானவர்தான். அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும். கெவின் வேகமாகச் சென்றதால் அவர் கட்டுப்பாட்டை மீறியவராக மாட்டார்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசியிருந்தார்.
இந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க சியாட்டில் காவல்துறை உத்தரவிட்டது. அதிகாரி கெவின் டேவ் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஜான்வி கந்துல்லாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சுமுகமாக முடிக்க, சியாட்டில் நிர்வாகம், 260 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சமரசம் செய்துள்ளது.
ஏற்கனவே நார்த் ஈஸ்டர்ன் யுனிவர்சிட்டி, ஜான்வி மரணத்திற்குப் பின் முதுநிலை பட்டத்தை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
