புதுடில்லி: வங்கதேசத்துக்கு கிடைத்ததை போலவே, அமெரிக்க நுால் மற்றும் பஞ்சை கொண்டு தயாரிக்கப்படும் இந்திய ஜவுளிக்கும் வரிச்சலுகை கிடைக்கும் என்று வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அமெரிக்காவிடம் இருந்து வங்கதேசத்துக்கு கிடைத்த வரிச்சலுகை, இறுதி ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கும் கிடைக்கும். வங்கதேச ஜவுளிக்கு அமெரிக்கா 31 சதவீத வரி விதித்தது.
பின்னர் அனைத்து பொருட்களுக்கும் வரி 19 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவிடம் இருந்து பஞ்சு மற்றும் செயற்கை இழைகளை வாங்கி, அவற்றில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்தால், அதற்கு அமெரிக்கா முழு வரி விலக்கு
அளிக்கும்.
அதேபோல், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த நுால் மற்றும் பஞ்சை கொண்டு ஜவுளி தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கு முழு வரி விலக்கு கிடைக்கும். இது இந்திய – அமெரிக்க இறுதி வர்த்தக ஒப்பந்தத்திலும் இருக்கும்.
இதனால் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காரணம், அமெரிக்காவில் பருத்தி உற்பத்தி மிகவும் குறைவு. அங்கிருந்து கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய்க்கு மட்டுமே பஞ்சு ஏற்றுமதி ஆகிறது.
ஆனால், இந்தியாவின் கொள்முதல் இலக்கோ கிட்டத்தட்ட 4.50 லட்சம் கோடி ரூபாய்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
